(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் கடப்பாட்டிலிருந்து இலங்கை அரசாங்கம் கடந்த 2020 பெப்ரவரி மாதம் விலகியமையானது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை நோக்கிய செயன்முறையில் வரவேற்கத்தக்கதொரு நகர்வல்ல என்று மதம் மற்றும் மதரீதியான நம்பிக்கைகளுக்கான சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கலாநிதி அஹ்மட் ஷஹீட் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் சிவில் சமூக, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தமது உரிமைகளுக்காகப் போராடும் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றமை மிகுந்த கரிசனையைத் தோற்றுவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஷ்ரீன் அப்துல் சரூர் என்பரால் எழுதப்பட்ட 'போருக்குப் பின்னரான இலங்கையில் முஸ்லிம்கள் : அடக்குமுறை, எதிர்ப்பு, மறுசீரமைப்பு' என்ற நிகழ்நிலையிலான புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சர்வதேச சமூகத்தை விழிப்புணர்வுடன் வைத்திருக்கும் விதமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவையாகும்.

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை உள்ளடங்கலாகக் குறித்த சில விடயங்களில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு, மனித உரிமைகளை அனுபவிப்பதில் காணப்படும் மட்டுப்பாடுகள், குறித்த சில இனங்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் வெறுப்புணர்வுப்பேச்சுக்கள் மற்றும் நிலைமாறுகால நீதிச்செயன்முறையில் வரையறுக்கப்பட்டளவிலான முன்னேற்றங்கள் ஆகியவை அவதானிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதிச்செயன்முறையை வலுப்படுத்தல் ஆகிய விடயங்களில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கிவந்தது. இருப்பினும் கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட ஆணைக்குழுக்கள் உண்மையைக் கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நம்பத்தகுந்த பொறிமுறையை நிறுவுவதில் தோல்வியடைந்திருப்பது மாத்திரமன்றி, குறிப்பிடத்தக்களவான மனித உரிமைசார் வழக்குகளின் விசாரணைகள் மற்றும் நீதிமன்றச்செயன்முறைகளிலும் தடையேற்படுத்தியிருக்கின்றன என்று ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரினால் கடந்த பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டளவிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றின் இயங்குகை தொடர்பில் இன்னமும் பல்வேறு கேள்விகள் காணப்படுகின்றன.

பலவருடகாலமாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் என்றவாறாக ஊடகங்களினால் காண்பிக்கப்பட்டுவந்திருக்கும் முஸ்லிம் சமூகத்தையும் அவர்களின் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற இனக்கலவரத்தைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாத்தாக்குதல்கள் இடம்பெற்றன.

நான் இலங்கையில் மதரீதியான சிறுபான்மையினரின் மனித உரிமைகள் நிலை குறித்து தொடர்ச்சியாகக் கண்காணித்து, அறிக்கையிட்டிருக்கின்றேன். அதுமாத்திரமன்றி சிறுபான்மையின சமூகத்திற்கு எதிரான வன்முறைகள் மற்றும் வெறுப்புணர்வை முடிவிற்குக்கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக வலியுறுத்தியிருக்கின்றேன்.

கடந்தகால மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுதல், வெறுப்புணர்வைத் தூண்டும் கட்டமைப்புக்களை வலுவிழக்கச்செய்தல், அனைவருக்கும் சமத்துவமான முறையில் நீதிநிலைநாட்டப்படுவதை உறுதிசெய்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழித்தல் மற்றும் மதரீதியான குற்றச்செயல்களுடன் தொடர்புடைய தண்டனைச்சட்டக்கோவையின் சரத்துக்களை மீளாய்விற்கு உட்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் உரியவாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று நான் பரிந்துரை செய்திருந்தேன்.

அத்தோடு இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் அரசியல் மற்றும் மதத்தலைவர்களுக்குரிய பொறுப்பை வலுப்படுத்துவதற்கும் சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தேன்.

இவ்வாறானதொரு பின்னணியில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் கடப்பாட்டிலிருந்து கடந்த 2020 பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கம் விலகியுள்ளமையானது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை நோக்கிய செயன்முறையில் வரவேற்கத்தக்கதொரு நகர்வல்ல.

அதேபோன்று சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தமது உரிமைகளுக்காகப் போராடும் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகின்றமை என்பன மிகுந்த கரிசனைக்குரிய விடயங்களாகும்.  

கொவிட் - 19 வைரஸ் பரவல் மனித உரிமைகள் நிலைவரம் மேலும் மோசமடைவதற்கு வழிவகுத்தது. குறிப்பாக விஞ்ஞானரீதியான நிரூபிக்கப்படாத நிலையிலும்கூட, முஸ்லிம் சமூகத்தின் மதரீதியான நம்பிக்கைக்கு முரணானவகையில் கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்வதைக் கட்டாயமாக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிப்பதையும் மாற்றுக்கருத்துக்களை வெளியிடுவதையும் குற்றமாக்குவதற்கும் அத்தகைய நபர்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கும் பயங்கரவாத்தடைச்சட்டம் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. இச்சட்டத்தின்கீழ் நூற்றுக்கும் அதிகமானோர் தன்னிச்சையான முறையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதுடன் அவர்களில் அநேகமானோர் இன-மதரீதியான சிறுபான்மையினரும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் சட்டத்தரணிகளுமாவர்.

இலங்கையில் முஸ்லிம்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் அதிகரித்துவரும் வெறுப்புணர்வுப்பேச்சுக்களுக்கு எதிராக செயற்பட்டுவந்த பிரபல சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து பயங்கரவாத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்.

மறுபுறம் கடந்தகாலத்தில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்கள், சித்திரவதைகள், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய பொலிஸ் மற்றும் பாதுகாப்புப்பிரிவினர் உள்ளிட்டோரை விசாரணைக்கு உட்படுத்துவதற்கும் தண்டனை வழங்குவதற்கும் மிகச்சொற்பளவான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்தோடு கடந்தகாலப்போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்கள் உயர்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளமை என்பன பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான அர்த்தங்களை இலங்கை அரசாங்கம் எவ்வாறு புரிந்துகொண்டிருக்கின்றது என்பதற்கான சில உதாரணங்களாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.