(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை -இந்தியாவிற்கு இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள திருகோணமலை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உடன்படிக்கையானது ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அடுத்த 35 ஆண்டுகளுக்கென செய்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய சகல எண்ணெய் குதங்களும் இந்தியாவசமாக உள்ளதாகவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சபையில் மீண்டும் வலியுறுத்தினார்.

திருகோணமலை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2003 ஆம் ஆண்டு உடன்படிக்கைக்கு  அமைய சரித ரத்வத்தே திறைசேரி செயலாளராகவும், தகாம் விமலசேன பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவராகவும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஆகவே 2003 ஆம் ஆண்டில் இருந்து 35 ஆண்டுகள் ஒப்பந்தம் என்றால் 2038 ஆம் ஆண்டு வரையில் நடைமுறையில் இருக்கும், ஆனால் இந்தியா என்பது மாலைதீவு போன்ற சிறிய நாடு அல்ல.

ஆகவே இந்தியாவிடம் இருந்து இவற்றை மீண்டும் பெற்றுக்கொள்வது சாதாரண விடயம் அல்ல. ஆகவே அவர்களிடம் இருந்து உடன்படிக்கையை பெற்றுக்கொள்ள பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றேன் என்றார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.