சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களின் அபிவிருத்திக்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி வழங்குவதாக, அதன் பணிப்பாளர் நாயகம் கெனிஷி யோகோயாமா (Kenichi Yokoyama), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார். 

உள்நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் கடந்த ஆண்டில் 750 மில்லியன் டொலர் சலுகைக் கடன் வழங்கப்பட்டிருந்தது. அந்தத் தொகையை, அடுத்த ஆண்டில் ஒரு பில்லியன் டொலராக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கெனிஷி யோகோயாமா தெரிவித்தார். 

ஜனாதிபதி அலுவலகத்தில், நேற்று (05) முற்பகல் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷயைச் சந்தித்துக் கலந்துரையாடும் போதே, ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கொவிட் தடுப்பூசி ஏற்றலில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தின் ஊடாக, சவால்களை வெற்றிகொள்வதற்குள்ள இலங்கையின் இயலுமை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது என்று, கெனிஷி யோகோயாமா எடுத்துரைத்தார். 

அனைத்து அரச நிறுவனங்கள், சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் ஒன்றுபட்ட செயற்பாடுகள் காரணமாகவே, தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம் மற்றும் கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டம் போன்றவற்றை வெற்றிகொள்ள முடிந்தது என, ஜனாதிபதி  எடுத்துரைத்தார். 

புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்களை நோக்கி நகர்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்காக, சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டங்கள் பல திட்டமிடப்பட்டுள்ளன. சேதனப் பசளைப் பயன்பாடு தொடர்பிலும், அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானமொன்றில் உள்ளது. சேதனப் பசளை உற்பத்தி மற்றும் நைதரசன் பிரிப்புக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, கெனிஷி யோகோயாமாவிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். 

கிராமப்புற மக்களில் 90 சதவீதமானோர் விவசாயத்தையே தங்களுடைய வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பதால், அவர்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அதேபோன்று, பொருளாதார ரீதியாகப் பயிரிடப்படும் பயிர்களின் மூலம் வனப்பகுதியை அதிகரிப்பதற்குள்ள தேவை குறித்தும் எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், அதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பணிப்பாளர் ஷென் ஷென் (Chen Chen), பிரதிப் பணிப்பாளர் உற்சவ் குமார் (Utsav Kumar), ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.