( எம்.எப்.எம்.பஸீர்)

நிக்கவரட்டிய பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட, அம்பன்பொல பொலிஸ் பிரிவில்,  அம்பன்பொல தெற்கு கிராமசேவகர்  யூ.எஸ்.எம். கபில பிரியந்த சபுகுமாரவின் ( 51 வயது) படுகொலை, ஒன்றரை இலட்சம் ரூபா ஒப்பந்தத்தின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் விடயங்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர். 

அதன்படி கொலை நடந்து 24 மணி நேரத்துக்குள் ஒப்பந்ததை வழங்கியதாக கூறப்படும் பிரதான சந்தேக நபரான  கல்கமுவ புகையிரத நிலையத்தின் உப பொறுப்பதிகாரி  ( நடவடிக்கை) சமன் பெரேரா அம்பன்பொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந் நிலையில் சந்தேக நபர் இன்று மாஹோ நீதிவான் நுத்தினன் சிறிவர்தன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 இந் நிலையில், இந்த படு கொலையுடன் நேரடி தொடர்புடைய மூவரைக் கைது செய்ய  அம்பன்பொல பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில் மூன்று பொலிஸ்  குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதில் நிக்கவரட்டிய வலய குற்ற விசாரணைப் பிரிவினரும் இணைந்து செயற்படுவதாக நிக்கவரட்டிய வலயத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.