(ஆர்.யசி)

இந்தாவிற்கு நலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் தமது செயற்பாடுகள் அமையும் எனவும், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அரணாக தாம் செயற்படுவோம் எனவும் வடக்கின் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகள் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம் தெரிவித்துள்ளனர். 

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய இந்தியா துணை நிற்கும் என்ற வாக்குறுதியை இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தமிழர் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர்  ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா நேற்று இரவு யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் அங்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். 

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்த நிலையில், வடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்,இரு நாட்டு அரச வியாபார வேலைத்திட்டங்கள் குறித்து கருத்துக்களை தெரிவித்திருந்ததுடன் இந்த சந்திப்பில் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுடன் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, யாழ். இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அதேபோல் மறு தரப்பினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடக்கு மாகாணசபைத்  தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், சுரேஷ்  பிரேமச்சந்திரன், யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன் ஆகியோரும், அரசியல் ஆய்வாளர்களான கே.ரி. கணேசலிங்கம், நிலாந்தன், யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத் தலைவர் ஜெயசேகரம், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சந்திப்பு குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகையில், இந்தாவிற்கு நலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் எமது செயற்பாடுகள் அமையும் என்ற விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தோம். இந்தியாவிற்கு எதிராக செயற்படும் எந்தவொரு தரப்பும் வடக்கு கிழக்கில் காலூண்டுவதை தமிழர் தரப்பு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்பதையும் நாம் எடுத்துக்கூறியிருந்தோம்.

தமிழர் தரப்பு எவ்வாறு இந்தியாவின் பாதுகாப்பிற்கு கவசமாக செயற்பட தயாராக உள்ளதோ அதேபோல் இந்தியாவும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முழுமையாக ஏற்று செயற்படும் விதத்தில் அவர்களின் நிலைப்பாடுகளை வைத்திருக்க வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்தியிருந்தோம். மேலும் இன்றைய 74 வருடங்களில் ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களின் நிலைமை கடிந்துகொண்டு செல்கின்றதே தவிர பாதுகாப்பு என்பதை உணரவில்லை. ஆகவே ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாக இருப்பது மட்டுமல்லாது இந்தியாவின் பாதுகாப்பின் தரப்பும் முற்றுமுழுதாக அழிந்து போகும் நிலைமை உருவாகும். எனவே தமிழ் மக்களின் அபிலாசைகள், தமிழ் மக்களை சம்பந்தப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம்.

தமிழ் மக்களின் நலன்களில் தாம் உறுதியாக இருப்பும் என்ற வாக்குறுதியை இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா முன்வைத்தார். அதேபோல் தமது பார்வையில் 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலமாக அந்த பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் என்ற கருத்தையும் அவர் தெரிவித்திருந்தார். எம்மை பொறுத்தவரை இது நல்லதொரு ஆரம்பம்.  

இந்தியாவின் மேல் மட்ட அதிகாரி ஒருவரை சந்தித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும், எனவே எமது நிலைமைகளை இன்னும் வலியுறுத்தி தமிழ் மக்களின் பார்வையும், எமது பார்வையும் என என்பதை உணர வைப்போம். அதேபோல் தமிழ் மக்களின் இருப்பை அரசாங்கம் எவ்வாறு திட்டமிட்டு இல்லாது செய்கின்றது என்பதை தமிழர் தரப்பாக சகலரும் முன்வைத்திருந்தோம். கல்வி, பொருளாதரம்,  வியாபாரம் என்ற பல்வேறு கோணங்களில் எமக்கு எதிரான அடக்குமுறைகள் என்பன தெளிவாக பதிவு செய்யப்பட்டது என்றார்.