தமிழர்களுடன் சமாதானத்தைக் காண்பதற்கு இலங்கை சொல்வதைச் செயலில் காட்டவேண்டும்

Published By: Digital Desk 2

04 Oct, 2021 | 09:09 PM
image

கேணல் ஆர். ஹரிஹரன்

இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 வது கூட்டத்தொடரில் செப்டெம்பர் 22 நிகழ்த்திய உரை ஐ.நா.வில் அவரின் முதன்முதலான உரையாக அமைந்தது.தனது நாட்டில் நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கம் பற்றி அவர் பேசினார்.ஆனால், போருக்கு பின்னரான நல்லிணக்கம் குறித்து புலம்பெயர் இலங்கை தமிழர்களுடன் பேசத் தயாராக இருப்பதாக ஐ.நா.செயலாளர் நாயகத்துடனான சந்திப்பில் அவர் செய்த அறிவிப்பு குறித்து பொதுச்சபை உரையில் எதையும் காணக்கூடியதாக இருக்கவில்லை.

அது ஒரு கருதாப்பிழையோ அல்லது தெரியாமல் இழைத்த தவறோ அல்ல.ஏனென்றால், 2021 மார்ச்சில் கோத்தாபயவின் அரசாங்கம் உலக தமிழர் சபை (Global Tamil Forum  ),பிரிட்டிஷ் தமிழர் சபை (British Tamil Forum)மற்றும் கனடிய தமிழர் காங்கிரஸ்(Canadian Tamil Congress) போன்ற பல புலம்பெயர் தமிழக்குழுக்களை தடைசெய்திருந்தது.

ஐக்கிய இராச்சியம்,ஜேர்மனி, இத்தாலி மற்றும் மலேசியாவில் இருந்து இயங்கும் பல தனிநபர்களையும் ஐ.நா.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அரசாங்கம் தடைசெய்தது.வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் அபிப்பிராயங்கள் மீது செல்வாக்குச் செலுத்தி பொதுக்கொள்கையொன்றைக் கட்டமைக்கிறார்கள் என்பதே அவர்கள் தடைசெய்யப்பட்டதற்கான காரணமாகும்.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் ராஜபக்ச அரசாங்கத்தை கடுமையாக கண்டித்த பின்னரே இந்த தடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் மோசமடைவது குறித்து எச்சரிக்கை செய்த அந்த அறிக்கை சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்போர் மற்றும் உரிமைமீறல்களினால் பாதிக்கப்படுவோர் தொல்லைகளுக்குள்ளாக்கப்படுவதையும் தீவிர கண்காணிப்புக்குள்ளாக்கப்படுவதையும் வெளிச்சம்போட்டுக்காட்டியது.

    தமிழர் பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டியது இந்தியாவுக்கு முக்கியமானது என்பதை இலங்கை விளங்கிக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.இலங்கை அரசாங்கமும் தமிழ் அரசியல் சமுதாயமும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரத்தயாரென்றால், இது விடயத்தில் இந்தியா அதன் நல்லெண்ணங்களை பயன்படுத்தவும் கூடும்.இது இலங்கையில் இந்திய முதலீடுகளுக்கு ( குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கும் நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கும் ) வரக்கூடிய தடையை அகற்றும்.இதைச் சாதிப்பதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ தனது ஐ.நா.உரையின் தொனிப்பொருளாக அமைந்த பொருளாதார சுபிட்சத்தை பற்றி கூறியவற்றை செயலில் காட்டவேண்டியிருக்கிறது.

   இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மிகப் பெரிய அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன நல்லிணக்கத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து தங்களுடன் பேசவருமாறு விடுத்த அழைப்புக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ இன்னமும் பதிலளிக்கவில்லை.அதனால், ஜனாதிபதி உள்நாட்டில் தமிழர் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து குறிப்பிடுகிறார் என்றால், யாரை அவர் அடையாளம் காட்டுகிறார்.

இதேயளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியொன்று இருக்கிறது தங்களுக்குள் பிசகுப்படுகின்ற தமிழ் அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு பொது நிலைப்பாடொன்றுக்கு வரத்தயாரா?

   உள்நாட்டில் அரசியல் கட்சிகளுடனும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதில் ஜனாதிபதி கருத்ததூன்றிய அக்கறையுடன் இருக்கிறார் என்றால்,சில தனிப்பட்டவர்கள் மீதும் பலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதும் விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டியிருக்கும்.அர்த்தபுஷ்டியான முன்னேற்றத்தைக் காண்பதற்கு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவேண்டுமேயன்றி, தெரிந்தெடுக்கப்பட்ட சில தரப்பினரை மாத்திரம் உள்ளடக்கக்கூடாது.ஆனால், ராஜபக்ச அரசாங்கம் உள்நாட்டுப் பிரச்சினைகளில் சர்வதேச நிறுவனங்கள் சம்பந்தப்படுவதை கடுமையாக எதிர்க்கும் நிலைப்பாட்டைக் கொண்டதாகும். 

இந்த நிலைப்பாட்டை இந்தியா உட்பட பல நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.நிலைபேறான சமாதானத்தைக் காண்பதற்கு உள்நாட்டு நிறுவனங்கள் ஊடாக  பொறுப்புக்கூறலும் நிலைமாறுகால நீதியும் அர்த்தபுஷ்டியான நல்லிணக்கமும் முன்னெடுக்கப்படுவது அவசியம்.அதுபோன்றே பொருளாதார அபிவிருத்தியின் விளைபயன்களையு ஒப்புரவான முறையில் பகிர்ந்துகொள்ளவேண்டியது அவசியம் என்பதில் ஜனாதிபதி ராஜபக்ச உறுதியாகவுள்ளார்.

  கடந்த ஒன்றரை வருடகாலத்தில் கூறியவற்றை அரசாங்கம் செயலில் காட்டுவதற்கு அரசாங்கம் அக்கறையுடனான முயற்சிகளை எடுத்திருந்தால், ஐ.நா.வில் கூறிய பலம்பொருந்திய மேற்படி வார்த்தைகள் மேலும் வலுவான அர்த்தத்தைக் கொண்டிருந்திருக்கும்.

   ஆனால், சர்வதேச தலையீட்டைத் தவிர்க்கவேண்டுமானால்,உள்நாட்டு நிறுவனங்கள் செயற்திறனுடையவையாக வாக்களித்தவற்றைச் செய்யக்கூடியவையாக இருக்கவேண்டும்.ஈழப்போர் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட, இனநல்லிணக்கச் செயன்முறைகளை தூண்டிவிடுவதற்கு அவசியமான நிலைமாறுகாலநீதி இன்னமும் அரைகுறையாகவே இருக்கிறது.ஜனாதிபதி சிறிசேனவினால் 2018 அமைக்கப்பட்ட காணாமல்போனோர் விவகார அலுவலகம்  நல்லிணக்கச் செயற்பாடுகளின் மூலமாக விளைபயன்களைக் காட்டமுடியாமல் இருப்பதற்கான விக்கல்களுக்கு நல்ல ஒரு உதாரணமாகும்.

காணாமல் போனோர் பற்றிய 29 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் 2020 டிசம்பர் வரையில் அந்த அலுவலகத்துக்கு கிடைத்திருக்கின்றன.2021 ஜனவரியில் இலங்கையில் உள்ள ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருடனான சந்திப்பொன்றில் ஜனாதிபதி ராஜபக்ஷ காணாமல்போனோர் சம்பந்தப்பட்ட பிரச்சினையை கையாளுவதற்கான தனது திட்டங்களை விளக்கிக்கூறியிருந்தார்.

  காணாமல்போனவர்கள் உண்மையில் இறந்துவிட்டார்கள் என்று ஜனாதிபதி கூறினார்.அவர்களில் பெரும்பாலானவர்கள்  புலிகளினால் கூட்டிச்செல்லப்பட்டார்கள் அல்லது பலவந்தமாக புலகளின் படையணிகளில் சேர்க்கப்பட்டார்கள்.விசாரணைகளுக்கு பிறகு காணாமல்போனோருக்கான அத்தாட்சிப்பத்திரம் உறவினர்களுக்கு வழங்கப்படும்.குடும்பங்களுக்கு 6000 ரூபா உதவி வழங்கப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.இந்த நடவடிக்கைகள் அந்த குடும்பங்களை திருப்திப்படுத்தவும் இல்லை,ஆட்கள்  காணாமல் போன சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும் இல்லை.ஆனால், இந்த பிரச்சினை முழுவதையும் தமிழ் அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாகவே ஜனாதிபதி நோக்குகிறார்.

  சிறைச்சாலைகள் முகாமைத்துவ அமைச்சராக இருந்த லொஹான் ரத்வத்தையின் அண்மைய தவறான நடத்தை இந்த அரசாங்கத்தில் உள்ள  தவறுகளுக்கெல்லாம் அடையாளமாக எடுத்துக்கொள்ளக்கூடியதாகும்.தனது வெற்றிகரமான ஆட்சிமுறையை உலகிற்கு வெளிக்காட்டுவதற்கு ஜனாதிபதி கோதாபய செப்டெம்பர் 6 தனது  ஐ.நா.உரையை தயார் செய்துகொண்டிருந்திருக்கக் கூடிய அதே நேரத்தில், மதுபோதையில் லொஹான் துப்பாக்கியுடன் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பலவந்தமாக 6 பேர் கொண்ட குழுவுடன் பிரவேசித்தார்.கைதிகளைப் பார்வையிடும் வழமையான நேரம் அல்ல அது.6 நாட்கள் கடந்து அவர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு ஹெலிகொப்டரில் பறந்து சென்றார். 

அதுவும் மதுபோதையில்தான்.கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு குழுவினரை அழைத்து தங்களது குற்றங்களை ஒப்புக்கொள்ளுமாறு அச்சுறுத்தினார். அந்த கைதிகள் 1979 பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள்.ஊகங்களினாலும் எதிரணியினாலும் பலத்த கண்டனத்துக்கு பிறகு அமைச்சர் சிறைச்சாலை முகாமைத்துவ பொறுப்பில் இருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்டார்.

  சட்டத்துக்கு பயப்படாமல் குற்றங்களைச் செய்துவிட்டு சுதந்திரமாக திரியும் போக்கு இந்த அரசாங்கத்தின் கீழ் இமாலய உயரத்துக்கு அதிகரித்துவிட்டது.கொடுமையான பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாக அரசாங்கம் திரும்பத்திரும்ப கூறுகின்ற போதிலும்  ஆட்களை விசாரணையின்றி தடுத்துவைப்பதற்கு அந்த சட்டம் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

  " 1971, 1989 ஆண்டுகளில்  இடம்பெற்றதைப் போன்ற ஆயுதக்கிளர்ச்சிகள் பெரும்பான்மையினரான சிங்கள பௌத்தர்களிடமிருந்து தற்போதைய சூழ்நிலையில்  வரப்போவதில்லை" என்று இலங்கையின் அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரான அசங்க அபேகுணசேகர புதுடில்லியில் இயங்கும் ஒப்சேவர் றிசேர்ச் நிறுவனத்துக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் கூறுகிறார்.

   இலங்கையும் இந்தியாவும் பூகோளத் தொடர்பு காரணமாக தேசிய பாதுகாப்பில் பரஸ்பர அக்கறை கொண்டிருக்கின்றன.இலங்கை நிலைகுலைந்தால் அதனால் இந்தியாவுக்கு பாதுகாப்புச் சவால் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.தற்போதைய இரு தரப்பு உறவை ஒரு மூலோபாய மட்த்துக்கு உயர்த்தவும் வெளிநாட்டு முதலீடுகள், மற்றும் ஏற்றுமதி மூலமான சம்பாத்தியத்தை வலுப்படுத்தி பாதுகாப்பு மற்றும்  இந்து சமுத்திரத்தின் பந்தோபஸ்தில் மூலோபாய ஒத்துழைப்பை விஸ்தரிக்கவும் இலங்கை விரும்புகிறது என்று இந்தியாவுக்கான புதிய இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கூறுகிறார்.

  இதைச் சாதிப்பதற்கு இலங்கை அதன் பெரும்பான்மையினவாத சிங்கள பௌத்த அரசியலை தணிக்கவேண்டும்; நிருவாகத்தை இராணுவமயமாக்குவதை தளர்த்தவேண்டும் ; இந்திய முதலீட்டாளர்களுக்கும் ஒப்புரவான வாய்ப்புக்களை வழங்கவேண்டும் ; இவை எல்லாவற்றையும் போலவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலைமாறுகால நீதி வழங்கப்படுவதையும் இன நல்லிணக்கச் செயன்முறை மீள ஆரம்பிக்கப்படுவதையும் உறுதிசெய்வதில் கண்ணால் பார்க்கக்கூடிய முன்னேற்றத்தை காட்வேண்டும்.

( கேணல் ஹரிஹரன் இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை நிலைகொண்டிருந்தபோது அதன் புலனாய்வுத்துறை தலைவராக பணியாற்றியவர்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48