எம்.எம்.சில்வெஸ்டர்

மாலைத்தீவுகளின் மாலேவில் நடைபெற்றுவரும் 13 ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் கால்பந்தாட்ட தொடரில் பங்கேற்றுவரும் இலங்கை கால்பந்தாட்ட அணி இன்றைய தினம் நேபாள கால்பந்தாட்ட அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.

முன்தாக இலங்கை அணி பங்கேற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது போட்டியில் 0க்கு1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது. 

இந்நிலையில், நடப்புச்சம்பியனான மாலைத்தீவுகள் அணியை அதன் சொந்த மண்ணில் வெற்றியீட்டி நேபாள அணியை இலங்கை அணி இன்றைய தினம் சந்திக்கவுள்ளது.

சர்வதேச கால்பந்தாட்ட தரவரிசையின்படி 168 ஆவது இடத்திலுள்ள நேபாள அணியை, 205 ஆவது இடத்திலுள்ள இலங்கை அணி, போட்டியின்போது நுணுக்கமான விடயங்களை நடைமுறைப்படுத்தி தமது நேர்மறையான  சிந்தனைகளுடன் இன்றைய போட்டியில் களமிறங்க வேண்டியது அவசியமாகும்.

இதேவேளை, இப்போட்டித் தொடரின் தமது முதற்  போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய கால்பந்தாட்ட அணி, பங்களாதேஷ் கால்பந்தாட்ட அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும்.

இலங்கை அணிக்கெதிரான ‍போட்டியில் 1க்கு0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய பங்களாதேஷ் அணி, மிகுந்த தன்னம்பிக்கையுடன் இந்திய அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

புள்ளிப்பட்டியலில் பங்களா‍தேஷ் மற்றும் நேபாளம் தலா ஒரு வெற்றியுடன் தலா 3 புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.