(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம்  தாக்கல் செய்துள்ள வழக்கு நாளை 4 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றின் தலைமை நீதிபதி தமித் தொடவத்த தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான  அமல் ரணராஜ மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய  சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற குழாம் முன்னிலையிலேயே  இந்த வழக்கு இவ்வாறு விசாரணைக்கு வரவுள்ளது.

அதன்படி, இந்த விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 25 பிரதிவாதிகளும் நாளை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதுடன், இதன்போது அவர்களுக்கு  குற்றப் பத்திரிகை கையளிக்கப்படவுள்ளது.

 இந் நிலையில் இந்த வழக்கு விசாரணைகளை மையப்படுத்தி, கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் நாளை சிறப்பு பாதுகாப்பு நடமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

நாளைய தினம், விஷேட பாதுகாப்பு திட்டமொன்று மேல் நீதிமன்ற வளாகத்தில் காணப்படும் என மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உறுதி செய்தார்.

 அதன்படி நாளைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்துக்கு, மூன்றடுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாக  நீதிமன்ற பதுகாப்பு விவகாரங்களை கையாளும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் முக்கிய சந்தேக நபராக கருதப்படும்  நெளபர் மெளலவி, சாஜித் மெளலவி,  தேசிய தெளஹீத் ஜமா அத்தின் ஆயுத பிரிவை வழி நடாத்தியதாக கூறப்படும் மொஹம்மட் மில்ஹான்,  மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சாதிக் அப்துல்லாஹ்,  சஹ்ரானின் சாரதி கபூர் மாமா எனும் ஆதம் லெப்பை, மொஹம்மட் சனஸ்தீன், மொஹம்மட் ரிஸ்வான் உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி  சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணம், கொழும்பு மேல் நீதிமன்றில்  இவ்வழக்கு தொடர்பிலான குற்றப் பத்திரிகையை  தாக்கல் செய்திருந்தார்.

23 ஆயிரத்து 270 குற்றச்சாட்டுக்களின் கீழ் பயங்கரவாத தடை சட்டத்தின் விதி விதாங்கள்  பிரகாரம் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.. சதி, தாக்குதலுக்கு தயாரானமை,  உதவி மற்றும் ஊக்குவித்தல், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் சேகரிப்பு, கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற குற்றங்களை பிரதிவாதிகளான 25 பேரும் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இந் நிலையில் இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்ற கட்டமைப்பு சட்டத்தின் 12 (2) ஆம் அத்தியாயம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் 450 (4) ஆம் அத்தியாயத்தின் கீழ் பிரதம நீதியரசரிடம் ட்ரயல் அட் பாருக்கான வேண்டுகோளை  சட்ட மா அதிபர் விடுத்திருந்தார்.  

சட்ட மா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணம் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிடம் இந்த கோரிக்கையை விடுத்திருந்த நிலையில் கடந்த முதலாம் திகதி  இந்த ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் பெயரிடப்பட்டனர்.

கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் தற்கொலைன் குண்­டு­த் தாக்குதல்  சம்­ப­வங்கள் பதி­வா­கின. கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு, கட்­டான பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கட்­டு­வ­பிட்டி - புனித செபஸ்­டியன் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு புனித சியோன் தேவா­லயம் ஆகி­ய  கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளும் கொழும்பு காலி முகத்­தி­ட­லுக்கு சமீ­ப­மா­க­வுள்ள ஷங்­கி­ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்­பெரி ஆகிய  ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 268 பேர் கொல்லப்பட்டதுடன், 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்க்குதல்கள் தொடர்பில் மொத்தமாக 723 சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணையாளர்களால் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 311 பேர் விளக்கமறியலிலோ அல்லது தடுப்புக் காவலின் கீழோ வைக்கப்பட்டு தொடர்ந்துய் விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி தனது விஷேட அறிக்கையில் குறிப்பிட்டார்.

அத்துடன் தாக்குதலுடன் தொடர்புபட்ட அல்லது அதற்கு உதவி ஒத்தாசை வழங்கிய  நபர்களின் 356 மில்லியன் ரூபா பெறுமதியான பணம், அசையும், அசையா சொத்துக்கள் இதுவரை அரசுடமையாக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 168 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார். இதனைவிட விஷேடமாக சுமார் ஒரு இலட்சம் தொலைபேசி இலக்கங்கள் வரை பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.