(எம்.மனோசித்ரா)

மிரிஹான பொலிஸ் பிரிவில் சிகேரா வீதி பிரதேசத்தில் நுகேகொடை குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய 5 கிராம் 470 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

குறித்த சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் தலங்கம பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பதிவு செய்யப்பட்ட சந்தேகநபர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது,

மிரிஹான மற்றும் தலங்கம பொலிஸ் பிரிவுகளில் வீடுகள் பலவற்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேகநபரிடமிருந்த பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதற்கமைய இரு தங்க வளையல்கள், தங்க மாலை, தங்க மாலையுடன் பதக்கம் , 3 ஜோடி தோடுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளக்காக மிரிஹாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.