ஐரோப்பிய-ஜப்பானிய கூட்டு விண்கலமானது சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளான புதனின் முதல் படங்களை அனுப்பியுள்ளது.

சூரிய குடும்பத்தின் சிறிய கோள் புதன். நிலாவைவிட அளவில் சற்று பெரியதாக இருக்கும் புதன் கோள், சூரியனுக்கு மிக அருகே உள்ள கோளும் இதுதான். 

எனவே பூமியில் உள்ளதை விட புதனில் சூரியன் மூன்று மடங்கு பெரிதாகவும், சூரிய வெளிச்சம் 11 மடங்கு அதிகமாகவும் இருக்கும். இந்த கோள் 88 பூமி நாட்களில் சூரியனை சுற்றி வருகிறது.

சூரியனுக்கு அருகே இருப்பதால் இங்கு பகலில் வெப்பம் 430 டிகிரி செல்சியஸ் என்ற அளவை எட்டும். அதுவே இரவில் மைனஸ் 180 டிகிரி செல்சியஸாக குறையும். எனவே இங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனினும் புதன் கோளின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் இணைந்து 2018 ஆம் ஆண்டு பெபிகொலம்போ விண்கலத்தை புதனுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விண்கலம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று புதனுக்கு மிக அருகில் அதாவது 200 கிலோமீட்டர் தொலைவில் பறந்து, புகைப்படம் எடுத்துள்ளது. 

மேலும் இதில் உள்ள கருவிகள் பல தரவுகளை சேகரித்துள்ளன. இவற்றை கொண்டு ஆய்வு செய்கையில், புதனின் தோற்றம் மற்றும் மேற்பரப்பு குறித்து பல தகவல்கள் கிடைக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். 

 5 முறை இதே போல நெருக்கமாக பறந்து புகைப்படம் எடுக்கும் இந்த விண்கலம் வரும் 2025ஆம் ஆண்டு புதனின் சுற்றுவட்டப்பாதையில் நுழைய உள்ளது.