எம்.எம்.சில்வெஸ்டர்                                                                                                                                             

ஆசிய மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கட்டாரில் நடைபெற்று வரும் 25 ஆவது ஆசிய மேசைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியின் கலப்பு இரட்டையர் போட்டியில் பங்கேற்ற இரண்டு அணிகளுமே தோல்வியைத் தழுவின.

 மகளிர் பிரிவில் பங்கேற்ற இலங்கை மகளிர் அணி 12 ஆவது இடத்தை பிடித்து அசத்தியது. 

ஜப்பானின் சான்சுக்கே ட்டுஹாமி , ஹினா ஹயாட்டா ஜோடியை எதிர்கொண்ட இலங்கையின் சமீர கினிகே, இஷாரா மதுரங்கி ஜோடி 3 சுற்றுகளை கொண்ட போட்டியில் 0க்கு3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.

 இதையடுத்து நடைபெற்ற சீன தாய்ப்பே அணிக்கெதிரான மற்‍றுமொரு கலப்பு போட்டியிலும் இலங்கை அணி 0க்கு3 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவியது. 

இந்த போட்டியில் இலங்கையின் செனுர சில்வா, பிமந்தி பண்டார ஜோடிக்கு எதிராக சீன தாய்ப்பேயின் ஹுவான் யன் ஷேன், லியூ ஹசின் யின் ஜோடி விளையாடியிருந்தது.

இதேவேளை, தனிநபர் பிரிவு அடிப்படையிலான அணிக்கான போட்டியில் பங்கேற்றிருந்த இலங்கை மகளிர் அணி  ஆசியாவின் 12 ஆவது இடத்தை பிடித்தது. 

இலங்கை மகளிர் அணி பங்களாதேஷ் மகளிர் அணிக்கெதிரான போட்டி மற்றும் ஜோர்தான் மகளிர் அணிக்கெதிரான போட்டியிலும் தலா 3 க்கு 0 என்ற கணக்கில் வென்று 12 ஆவது இடத்தை பிடித்தது. ஆசிய மேசைப்பந்தாட்ட வரலாற்றில் இலங்கை மகளிர் அணியின் சிறந்த தரநிலை பெறுபேறாகும்.

ஆடவர்களுக்கான அணி நிலைப் போட்டியில் பங்கேற்ற இலங்கை ஆடவர் அணியால் 18 ஆவது இடத்தையே பெற முடிந்தது. இதில் இலங்கை ஆடவர் அணி பங்களாதேஷ் ஆடவர் அணிக்கெதிரான போட்டியில் மாத்திரமே வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.