(எம்.மனோசித்ரா)

இலங்கையின் முழு சனத்தொகையில் 30 வயதுக்கு மேற்பட்டோரில் 55 சதவீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

20 - 30 வயதுக்கு இடைப்பட்டோரில் 50 சதவீதமானோருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

 கொவெக்ஸ் செயற்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக மேலும் 4 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி தொகை நேற்று வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்தன.

கொவெக்ஸ் செயற்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இதுவரையில் 9 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. 

அத்தோடு இதுவரையில் கொவெக்ஸ் செயற்திட்டத்தின் கீழ் பைசர், மொடர்னா மற்றும் அஸ்ட்ரசெனிகா என 42 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று இவற்றை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,  

உலக சுகாதார ஸ்தாபனம், அமெரிக்கா என சர்வதேச ரீதியில் எமக்கு வழங்கப்படும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். 

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் பணிகள் உயர் மட்டத்தில் உள்ளன. இன்று நாம் வெற்றிகரமாக தடுப்பூசி வழங்கும் முதல் பத்து நாடுகளுக்குள் இடம்பிடித்துள்ளோம்.

இதுவரையில் முழு சனத்தொகையில் 30 வயதுக்கு மேற்பட்டோரில் 55 சதவீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

20 - 30 வயதுக்கு இடைப்பட்டோரில் 50 சதவீதமானோருக்கு முதற்கட்ட தடுப்பூசியும் , 18 சதவீதமானோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. 

தடுப்பூசி வழங்கலுக்கான வெற்றிகரமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பாரிய ஒத்துழைப்பு கொவெக்ஸ் செயற்திட்டம் ஊடாக எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.