நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, கண்டி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.

இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவுகின்றது. 

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆறுகளை அண்மித்து வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நுவரெலியாவில் கடும் மழையை தொடர்ந்து அதிகரித்த நீர்மட்டம் நேற்று மாலை நேரத்தில் மேலும் அதிகரித்துள்ளது. 

இதன் காரணமாக சுமார் 10 வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து நுவரெலியா - அட்டன் பிரதான பாதையிலும் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது .

அத்துடன் வேன் ஒன்றின் மீதும் மண் திட்டொன்றும் சரிந்துள்ளது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சீரற்ற காலநிலை நிலவி வருவதால் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.