(எ‍ம்.எம்.சில்வெஸ்டர்)

மாலைத்தீவுகளில் இன்று ஆரம்பமான 13 ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன வல்லவர் போட்டித் தொடரின் முதற் போட்டியில்  பங்களாதேஷ் அணியை எதிர்த்தாடி இலங்கை அணி  0க்கு1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

May be an image of ‎1 person, playing a sport and ‎text that says "‎SDIA FULL TIME 0-1・ TOPU BARMAN 56' ا #GOLDENARMY‎"‎‎

போட்டியின் ஆரம்பம் முதலே  இலங்கை வீரர்கள் தடுத்தாடும் நோக்கிலேயே விளையாடியதுடன்,  பங்களாதேஷ் அணி வீரர்கள் சிறப்பாக கோல் அடிக்கும் முனைப்பில் விளையாடியை அவதானிக்க முடிந்தது. 

போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. பங்களா‍தேஷ் அணி வீரர்களால் கோல் அடிப்பதற்கு எடுத்த முயற்சிகளை தடுப்பாளர்கள் சாதுரியமாக தடுத்தனர். 

குறிப்பாக டக்ஸன் பியுஸ்லஸ் சிறப்பாக தடுத்தார். அதேபோல் அணித்தலைவரும் கோல் காப்பாளருமான சுஜான் பெரேராவும் எதிரணி வீரர்கள் கோல் வலை நோக்கி அடித்த பந்துகளை இலாவகமாக தடுத்தார்.

எவ்வாறாயினும், போட்டி சூடு பிடித்து நடைபெற்று இருந்தபோது,  போட்டியின் 56 ஆவது நிமிடத்தில் பெனால்டி பெட்டிக்குள் டக்ஸன் பந்தை கையால் தட்டிவிட்டதன் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு தண்ட உதை (பெனால்டி ) வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இதனை சதாகமாக பயன்படுத்திக் கொண்ட பங்களாதேஷ் அணியின் பார்மன் தோபு கோலாக்கி தமது அணியை 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் முன்னிலைக்கு கொண்டுச் சென்றார். போட்டியின் நிறைவில் பங்களாதேஷ் அணி 1க்கு 0 என்ற கணக்கில் வென்று இப்போட்டித் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இறுதி வரை இலங்கை அணி கோல் போடுவதற்கான வாய்ப்புக்களை உருவாக தவறியிருந்தமை போட்டியின் தோல்விக்கு காரணமாகும் என கால்பந்தாட்ட விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தனர். இப்போட்டியின் ஆட்ட நாயகனாக பங்களாதேஷ் அணிக்காக கோல் அடித்த பார்மன் தோபு தெரிவானார்.