பெண்ணொருவரை துப்பாக்கியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஆனமடுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கடும் நிபந்தனையுடன் பிணையில் செல்ல ஆனமடுவ நீதிவான் நிமேசிகா பட்டபெதிகே அனுமதி வழங்கினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான முன்னாள் ஆனமடுவ பிரதேச சபை தலைவர் ஒருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நெல் வயல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆனமடுவ தட்டேவா பகுதியிலுள்ள 58 வயதான மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவரை துப்பாக்கியால் தாக்கியதாக குறித்த பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு எதிராக கடந்த 28ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆனமடுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கடந்த 29ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான முன்னாள் பிரதேச சபைத் தலைவர் நேற்று வியாழக்கிழமை (30) ஆனமடுவ நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, கடும் நிபந்தனையுடன், சந்தேக நபரை 5 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.