(எம்.எம்.சில்வெஸ்டர்)

நா‍ளைய தினம் ஆரம்பமாகவுள்ள 13 ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மளேன வல்லவர் போட்டித் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை  மாலைத்தீவுகளின் தலைநகரான மாலேயில் நடைபெறவுள்ளது.

நடப்புச் சம்பியன் மற்றும் போட்டி ஏற்பாடு நாடான மாலைத்தீவுகள், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய 5 நாடுகள்  13 ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன வல்லவர் போட்டித் தொடரில் பங்கேற்கின்றன. 

லீக் முறையில் நடைபெறும் இப்போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை ஏனைய அணிகளுடன் விளையாடும். புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் எதிர்வரும் 16 ஆம் திகதியன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும். 

நாளைய தினம் ஆரம்பாகும் முதற் போட்டியில் நேபாளம் அணியை போட்டி நடப்புச் சம்பியனான மாலைத்தீவுகள் அணி எதிர்கொள்கிறது. இப்போட்டி இலங்கை நேரப்படி நாளை மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதைத் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணிணை எதிர்த்தாடவுள்ளது.

1993 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இப்போட்டி வரலாற்றில் இந்தியா 7 தடவைகள் சம்பியன் கிண்ணம் வென்று அதிக தடவைகள் சம்பியன் கிண்ணத்தை வென்ற அணியாக திகழ்கிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக மாலைத்தீவுகள் 2 தடவைகளும், இலங்கை (1995), பங்களாதேஷ்(2003), ஆப்கானிஸ்தான்  (2013)  ஆகியவை தலா ஒரு தடவை சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன.

கோல் காப்பாளரான சுஜான் பெரேராவின் தலைமையின் கீழ் களமிறங்கவுள்ள 23 ‍ வீரர்கள்‍ கொண்ட இலங்கை குழாத்தில் கவிந்து இஷான், சமோத் டில்ஷான், சரித்த ரத்நாயக்க, வஸீம் ராசிக், மொஹமட் ஆக்கிப், அசிக்குர் ரஹுமான், ருவன் அருணசிறி, டக்ஸன் பியுஸ்லஸ்,  கவீஷ் லக்பிரிய, ஹர்ஷ பெர்னாண்டோ, ரொஷான் அப்புஹாமி, மேர்வின் ஹெமில்டன், டிலொன் டி சில்வா, சலன சமீர, ஜூட் சுபன், அமான் பைஸர், எடிசன் பிகராடோ , மொஹமட் முஸ்தாக், மொஹமட் பஸால், மொஹமட் சிபான், சுப்புன் தனஞ்சய, ரிப்கான் மொஹமட் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.