நாட்பட்ட மற்றும் விஷேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் பொரளை சீமாட்டி சிறுவர் போதனா வைத்தியசாலையில் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டன. 

12 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட மேற்படி  தேவையுடைய  பாடசாலை மாணவர்களுக்கே இந்த  பைஸர் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இன்றுவரை சுமார்  700 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு  பைஸர் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஷேட வைத்தியர்கள் அனுபவமுள்ள தாதியர்கள் மூலம் பூரணமான முறையில் மாணவர்களின் நோய்கள் உள்ளிட்ட அவர்களின் சகல விடயங்களும் அவர்களை அழைத்து வரும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடமிருந்து  பெறப்பட்ட பின்னரே குறித்த மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றப்படுகின்றன.  

எனவே பெற்றோர்களும் பாதுகாவலர்களும் அஞ்சவோ அல்லது அச்சமடையவோ  தேவையில்லை  என சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர்.

கொழும்பில்  பெருமளவான மாணவர்களை அவர்களின் பெற்றோர் அழைத்து வந்து குறித்த தடுப்பூசியை போட்டுக் கொள்கின்றனர். 

குறிப்பாக வைத்தியர்களும் தாதியரும் குறித்த மாணவர்கள் விடயத்தில் அதீத அக்கறை செலுத்துவதுடன் அவர்களை சிறந்த முறையில் வரவேற்று அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கி தடுப்பூசிகளை சிறப்பக போட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.