எவ்வாறு கிடைத்தது அல்லது சம்பாதிக்கப்பட்டது என்பதை சரியாக தெளிவுபடுத்த முடியாத, குறுகிய காலத்துக்குள் சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்தார் எனும் குற்றச் சாட்டின் கீழ் விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு–7, கறுவாத்தோட்டம், கிங்ஸி வீதியில் இலக்கம் 70 -–3/1 எனும் இலக்கத்தில் அமைந்துள்ள அதிசொகுசு வீடொன்றை 2 கோடியே 70 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பிலேயே நேற்று முன் தினம் அதாவது வியாழக்கிழமை அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டார். இந் நிலையிலேயே அவர் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க சட்டத்தின் ஊடாக திருத்தப்பட்ட 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் 3,4 ஆவது அத்தியாயங்களின் படியும், இலங்கை தண்டனை சட்டக் கோவையின் 386 மற்றும் 389 ஆகிய அத்தியாயங்களின் பிரகாரமும் தண்டனைக்குரிய குற்றத்தை முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே புரிந்துள்ளார் என்பதே புலனாய்வுப் பிரிவினரினது வாதமாகும்.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் மேற்பார்வையில் அதன் பணிப்பாளர் சுதத் நாகஹமுல்லவின் ஆலோசனைக்கு அமைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி மொஹான் சிறிவர்தன தலைமையிலான பொலிஸ் குழுவினரால் மஹிந்தானந்தவுக்கு எதிராக நடத்தப்படும் சொத்துக் குவிப்பு தொடர்பிலான விசாரணையானது மிக விரிவானது. அதன்படி அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்படக் காரணமான கறுவாத்தோட்டம், கிங்ஸி வீதி அதி சொகுசு வீட்டின் கொள்வனவானது அதில் ஒரு விடயம் மட்டுமே. இதனைத் தவிர மேலும் பல சொத்துக்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மொஹான் சிறிவர்தன தலைமையிலான பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உண்மையில் முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவுக்கு எந்தளவு சொத்துக்கள் இருக்கின்றன என்பதை முதலில் வெளிப்படுத்தியவர் அவரது மனைவியாவார். 2012 ஆம் ஆண்டு கடுவலை நீதிமன்றில் அவர் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கில், எழுத்து மூல வாதங்களின் போது அவர் முன்வைத்த விபரங்களின் படியே மஹிந்தானந்தவின் சொத்துக்கள் குறித்து முதலாவது வெளிப்படுத்தல் அமைந்திருந்தது.
அதன்படி கண்டி, ஜோர்ஜ். ஆர். டி. சில்வா மாவத்தையில் 12 பேர்ச் இடம்- (பெறுமதி 3 இலட்சம்), கண்டி, ஜோர்ஜ். ஆர். டி. சில்வா மாவத்தையில் 3.5 பேர்ச் இடம் - (பெறுமதி 1.5 இலட்சம்), கண்டி, ஜோர்ஜ்.ஆர். டி. சில்வா மாவத்தையில் 18.3 பேர்ச் இடம் -(பெறுமதி 10 இலட்சம்),நாவல சந்ரா வெத்தசிங்க மாவத்தையின் 3 ஆவது ஒழுங்கையில் 15/1 ஆம் இலக்க 15.57 பேர்ச் சொத்து - (பெறுமதி 100 இலட்சம்), நாவல சந்ரா வெத்தசிங்க மாவத்தையின் 3 ஆவது ஒழுங்கையில் 15/31– பீ மற்றும் 15/31 இலக்கங்களைக் கொண்ட வீடுகள் - (பெறுமதி 87 இலட்சம்), பொரளை குருப்பு வீதியில் இலக்கம்– 66 எனும் முகவரியில் உள்ள 20.85 பேர்ச் இடம் - (பெறுமதி 100 இலட்சம்), கொழும்பு– 8 எல்விட்டிகல மாவத்தையில் ட்ரிலியம் ரெஸிடன்ஸ் வீட்டுத் தொகுதியில் 153– - 9/2 ஆம் இலக்க வீடு - (பெறுமதி - 285 இலட்சம் ), கொழும்பு– 7 , கிங்ஸி வீதி 70–- 3/1 எனும் இலக்கத்தில் உள்ள அதி சொகுசு வீடு- (பெறுமதி 270 இலட்சம்) என 856.5 இலட்சம் ரூபா (8.5 கோடி ரூபா) பெறுமதியான சொத்துக்கள் 2012 ஆம் ஆண்டு ஆகும் போதும் மஹிந்தானந்தவினால் சம்பாதிக்கப்பட்டுள்ளமை தெளிவானது.
இந் நிலையிலேயே கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஆட்சி மாற்றத்தின் பின்னர் மஹிந்தானந்தவின் சொத்துக்கள் அவருக்கு சிக்கலை கொடுக்க ஆரம்பித்தன. அதாவது இலக்கம் 258/9, செத்சிறி மாவத்தை, கொஸ்வத்தை - தலங்கம எனும் முகவரியைச் சேர்ந்த ஊழலுக்கு எதிரான குழு எனும் அமைப்பின் அமைப்பாளரான வசந்த சமரசிங்க என்பவரின் முறைப்பாட்டை அடுத்தே இந்த சிக்கல்கள் ஆரம்பிக்கின்றன. அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடொன்றை செய்யும் வசந்த சமரசிங்க, சட்ட விரோதமாக சம்பாதித்த பணம் ஊடாக மஹிந்தானந்த அளுத்கமகே சொத்துக்களை குவித்துள்ளதாகவும் அது தொடர்பில் தேடிப் பார்க்குமாறும் தனது முறைப்பாடூடாக புலனாய்வாளர்களைக் கோரியிருந்தார்.
இந் நிலையில் தான் அப்போது பொலிஸ் மா அதிபராக இருந்த என்.கே.இலங்ககோனின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்தனர்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் மொஹான் சிறிவர்தன தலைமையிலான புலனாய்வுக் குழு முன்னெடுத்த விசாரணைகளின் படி, ஏற்கனவே அவரது மனைவியினால் வெளிப்படுத்தப்பட்டதாக நாம் எழுதியுள்ள சொத்துக்களுக்கு மேலதிகமாக, லண்டனில் பிளட் –- 4 எனும் பெயரில் ஒரு வீட்டினையும், எஸ். ஈ–- 26 ௨6 -– ஜீ –- ஏ - எனும் முகவரியில் ஒருவீட்டினையும் அவர் கொள்வனவு செய்துள்ளமை தொடர்பிலான தகவல்களும் வெளிப்பட்டன. இந் நிலையில் இந்த அனைத்து சொத்துக்களையும் மையப்படுத்தி மிக விரிவான விசாரணை ஒன்றினை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மொஹான் சிறிவர்தன தலைமையிலான புலனாய்வாளர்கள் ஆரம்பித்தனர்.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணைகள் அந்த புலனாய்வாளர்களுக்கு எளிதானதாக அமைந்திருக்கவில்லை. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் இவ்விசாரணைகள் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நீடித்தன. இதன்போது பல முறை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட மஹிந்தானந்தவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. இதனைவிட நேற்று முன்தினம் காலையாகும் போது 189 சாட்சியாளர்களின் வாக்குமூலங்களை இந்த சொத்துக் குவிப்பு விவகாரம் தொடர்பில் பொலிஸார் பதிவு செய்துகொண்டிருந்தனர்.
அதன்படியே வெளிப்படுத்தப்பட்ட பல்வேறு தகவல்களுக்கு அமைவாக, சட்ட மா அதிபரின் ஆலோசனையையும் பெற்றுக்கொண்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு– 7, கிங்ஸி வீதி 70-– 3/1 எனும் இலக்கத்தில் உள்ள அதி சொகுசு வீடு- (பெறுமதி 270 இலட்சம்) தொடர்பில் மஹிந்தானந்தவைக் கைது செய்தனர்.
விசாரணை அதிகாரியான உதவி பொலிஸ் அத்தியட்சகர் மொஹான் சிறிவர்தனவின் தகவல்களின் படி, கிறிஸ்தோபர் ரொஷானா மார்டின் என்பவருக்கே கொழும்பு–7 , கிங்ஸி வீதி 70-–3/1 எனும் இலக்கத்தில் உள்ள அதி சொகுசு வீடு சொந்தமாக இருந்துள்ளது. அந்த வீட்டை 27 மில்லியன் ரூபாவுக்கு அதாவது 270 இலட்சம் ரூபாவுக்கு மஹிந்தானந்த அளுத்கமகே கொள்வனவு செய்துள்ளார். இதற்காக மஹிந்தானந்தவின் பெயரில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இலங்கை வங்கிக்கிளையில் உள்ள வங்கிக்கணக் கூடாக 10 மில்லியன் ரூபா கடனும் பெறப்பட்டுள்ளது.
3 காசோலைகள் ஊடாக இந்த பணம் பெறப்பட்டு குறித்த வீட்டை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதியாக கருதப்படும் டக்ளஸ் கஹந்தகமவின் பெயரில் 2012.02.28 அன்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஒப்பந்தக்காரர்களில் ஒருவராக கருதப்படும் சிறில் ஜயசிங்கவின் பெயரில் 2012.02.26 அன்றும் மூன்றாவது காசோலை மஹிந்தானந்தவின் சாரதியான வசந்த ராஜபக் ஷவின் பெயரிலும் வழங்கப்பட்டுள்ளமையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். எனினும் குறித்த வீட்டை கொள்வனவு செய்ய பயன்படுத்திய தொகையின் எஞ்சியுள்ள பெறுமதி எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பது குறித்து பாரிய சந்தேகம் நிலவுகின்றது.
ஏற்கனவே இலஞ்ச ஊழல் ஆணைக் குழு மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சிறப்பு விசாரணைகளை நடத்தும் நிலையில், சொத்துக் குவிப்பு குறித்து கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் புலனாய்வுப் பிரிவு நடத்தும் விசாரணைகள் மேலும் பல மர்மங்களை அல்லது நிதி சார்ந்த விடயங்களை அம்பலப்படுத்தும் என நம்பப்படுகின்றது.
இந் நிலையிலேயே நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய மஹிந்தானந்தவின் அனைத்து சொத்துக்கள் குறித்தும் விரிவான விசாரணைகளை புலனாய்வாளர்கள் தொடர்கின்றனர்.
விசேடமாக மஹிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத் துறை அமைச்சராக கடமை வகித்த போதே பெரும்பாலான இந்த சொத்துக்களை கொள்வனவு செய்துள்ள நிலையில், அதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் சங்கத்தின் நிதியையும் பயன்படுத்தியுள்ளமை தொடர்பிலான தகவல்களும் தற் சமயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி அந்த சங்கத்தின் நிதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் மஹிந்தானந்தவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனையும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இதற்காக கடந்த 2016.08.21 அன்று இது தொடர்பிலான கோவைகள் சீ.ஆர்./01/ எல்.எல்.என்./சீ.எப்.டி./05/2016 எனும் இலக்கத்தில் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உண்மையில் 1500 ரூபா சம்பளத்துடன் நிதி நிறுவனம் ஒன்றில் தொழிலை ஆரம்பித்த மஹிந்தானந்த, 1993 ஆம் ஆண்டு முதல் அரசியலில் காலடி வைத்து உள்ளூராட்சி முதல் பாராளுமன்றம் வரை வந்தவர். அப்படியிருக்கையில் இத்தனை சொத்துக்களை அவர் எவ்வாறு சம்பாதித்தார் என்பது குறித்து கண்டிப்பாக ஆராய்ந்தே ஆக வேண்டியுள்ளது.
பேராசிரியர் சரத் விஜேசூரிய அண்மையில் ஊடகவியலாளர் ஒருவரின் புத்தக வெளியீட்டில் குறிப்பிட்ட சில கருத்துக்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.
'துமிந்த சில்வா என்ற நபர் பாதுகாப்பாக இந்த சமூகத்தில் எப்படி செயற்பட்டார்? அவர்கள் எப்படி வர்த்தகத்தை செய்தனர்? அவர்களின் அதிகாரத்தை பரப்பியது எப்படி, துமிந்த சில்வா பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இசுருபாயவிற்கு அருகில் மூன்று பாலங்கள் சந்தி என்ற ஒரு இடம் இருக்கின்றது.
ஒரு காலத்தில் அங்கு லக் ஷ்மி புட் சென்டர் என்ற பெயரில் உணவு விற்பனை செய்யும் உணவகம் ஒன்று இருந்தது.
அந்த உணவகத்தில் துமிந்த சில்வா பற்றுச்சீட்டை எழுதி எனக்கு சாப்பாட்டை வழங்கியுள்ளார். எனக்கு அவர் உணவு விற்றுள்ளார்.
துமிந்த சில்வாவின் அன்றைய நிலைமையை எண்ணிப்பாருங்கள். இவர்களை போன்ற மிகப் பெரிய செல்வந்தர்கள் எப்படி உருவாகின்றனர்?.
இவ்வாறானோரை குற்றம் சார்ந்த அரசியல் சக்தி பாதுக்காக்கின்றது '
இந்த வார்த்தைகள் பேராசிரியர் சரத் விஜேசூரியவினால் பரத லக் ஷ்மனின் படுகொலை தொடர்பில் மரண தண்டனை வழங்கப்பட்ட துமிந்தவை மட்டும் மையப்படுத்தி கூறப்பட்டவையல்ல. மாறாக திடீர் என பணக்காரர்களாகிய அத்தனை பேர் தொடர்பிலும் தேடிப் பார்க்க வேண்டிய கட்டாயத்தை தெளிவு படுத்துகின்றது. அப்போது தான் கறுப்புப் பணத்தை நாட்டில் இருந்து முற்றாக ஒழித்து, பொது மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க முடியும்.
எம்.எப்.எம்.பஸீர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM