நியூ­ஸி­லாந்து அணிக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்­டிகள், 5 ஒருநாள் போட்­டிகள் மற்றும் 2 இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த வியாழக்கிழமை நியூசிலாந்தின் டன்டினில் இடம்பெற்றது.

இப் போட்டியில் நியூசிலாந்து அணி 122 ஓட்டங்களால் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலைபெற்றுள்ளது.

இந் நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான மிக முக்கியமானதும் இறுதியுமான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஹமில்டனில் ஆரம்பமாகியது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சிறிவர்தன 62 ஓட்டங்களையும் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

நியூசிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் போல்ட் மற்றும் சௌத்தி ஆகியோர்  தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் 63 ஓட்டங்களுடனும் சாமிர ஓட்டமெதனையும் பெறாத நிலையிலும் ஆடுகளத்திலுள்ளனர்.