(ரொபட் அன்டனி)

இலங்கையில் காணாமல்போனோர் குறித்த விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி புதன்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தின் 27ஆவது அறையில் உபகுழுக் கூட்டம் ஒன்று நடை பெறவுள்ளது. அனைத்து விதமான அநீதிகளுக்கும் எதி ரான சர்வதேச இயக்கம் என்ற அமைப்பு நடத்தவுள்ள இந்த உபகுழுக் கூட்டத்தில் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கை பிரதிநிதி களும் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் இலங்கையிலிருந்து ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இராஜதந்திரிகள் என பலர் இந்த உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

இந்த உபகுழுக் கூட்டத்தில் இலங்கையில் காணாமல் போனோர் குறித்த நிலைமைகள் மற்றும் அதற்கான தீர்வு விவகாரம் குறித்து கலந்துரையாடப்படும். இதில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். குறிப்பாக வட மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் இந்த உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இன்று 14 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை வளாகத்தின் 27 ஆம் இலக்க அறையில் அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் நிறுவனத்தின் ஏற்பாட்டில் விசேட உபகுழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 22 ஆம் திகதி பசுமை தாயகம் அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமை பேரவை வளாகத்தின் 27 ஆம் இலக்க அறையில் இலங்கை தொடர்பான உபகுழுக் குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இது இவ்வாறு இருக்க நேற்று முன்தினம் ஜெனிவா அமர்வில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கான பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டவேண்டியது அவசியமாகும். குறிப்பாக நீதி வழங்கும் செயற்பாட்டில் அரசாங்கம் தெளிவான முன்னேற்றத்தை வெளிக்காட்ட வேண்டுமென தெரிவித்திருந்தது.

அதுமட்டுமன்றி நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் சிவில் சமூகத்தின் பங்களிப்பை அதிகளவில் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம் என்றும் ஐ.நா. செயற்குழுவின் பிரதிநிதி ஸ்லாமி நேற்று முன்தினம் சுட்டிக்காட்டினார்.