(நா.தனுஜா)

தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினத்தில் ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்துவதிலிருந்து தகவல் அறியும் உரிமையின் உறுதிப்பாடு எந்த மட்டத்தில் உள்ளது என்ற விடயம் வெளிப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்று  தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினமாகும். ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசாங்கமானது பாராளுமன்றத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நிறைவேற்றியதன் ஊடாக, நாட்டில் தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்தியது.

ஆனால் இவ்வாறானதொரு நாளில் பொதுமக்களுக்குத் தகவல்களை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களும் பத்திரிகை ஆசிரியர்களும் குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகின்றார்கள்.

எனவே தகவல் அறியும் உரிமைக்குரிய பிரத்யேக நாளில்கூட ஊடகவியலாளர்களின் பணியில் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதிலிருந்து, தற்போது தகவல் அறியும் உரிமையின் உறுதிப்பாடு எந்த மட்டத்தில் உள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களைக் குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு அழைத்து விசாரணைக்குட்படுத்திய அதேவேளை, மறுபுறம் பிரதமர் தலையீடுசெய்து அவ்விசாரணைகளை நிறுத்துகின்றார்.

இதன்மூலம் இருவிடயங்கள் வெளிப்பட்டுள்ளன. முதலாவது தகவல் அறியும் உரிமை உரியவாறு உறுதிப்படுத்தப்படவில்லை என்பதாகும். இரண்டாவது விசாரணைகள் சுயாதீனமான முறையில் நடைபெறவில்லை என்பதாகும். மாறாக உயர்மட்ட அதிகாரிகளின் தேவைகளுக்கு அமைவாகவே விசாரணைகள் நடைபெறுகின்றன என்று குறிப்பிட்டார்.