குமார் சுகுணா 

டெல்டா கொரோனா பரவலின் தாக்கம் காரணமாக இலங்கை தொடர்ந்தும் சிவப்பு வலையத்தில்  உள்ளது. இந்நிலையில் மக்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் மருத்துவ சங்கங்களின் கடுமையான  அழுத்தம் மற்றும் மத தலைவர்களின் வேண்டுகோளினால் தான் தற்போது தனிமைப்படுத்தல்  ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. 

ஆனால் இதனை மக்கள் கடைப்பிடிக்கின்றனரா என்பது கேள்விக்குறி. வழமை போல வீதிகளில் பல இடங்களில் நடமாடுவதனையும்  பொலிஸாரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு விருந்துபசாரங்களில்  கலந்து கொள்வதும் விருந்தினர்களின் வீடுகளுக்கு செல்வதும் அதிகரித்து கொண்டு செல்கிறது. மலையகத்தில் இந்த நிலை அதிகமாக உள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை. 

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக மதுபான சாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. ஆயினும்  இலங்கை முழுவதிலும் சட்ட விரோத மது – கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு கைதாகுபவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து செல்வதனை நாம் பார்க்கின்றோம்.  குறிப்பாக கசிப்பு விற்பனை பாரிய அளவில் அதிகரித்து செல்கின்றது. இதற்கு மலையகம் விதிவிலக்கல்ல. 

மலையகத்தில் இந்த ஊரடங்கு காலத்திலும் கசிப்பு உற்பத்தி விற்பனைகள் ஜோராக நடைபெற்று வருகின்றதை நாம் அறிய முடிகின்றது.

கசிப்பு எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது என்று அதனை குடிப்பவர்களுக்கு தெரிவதில்லை. இதில் உடலுக்கு தீங்கு விளைவுக்கும் பொருட்களை அதிகமாக பயன்படுத்தி காச்சிகின்றனர். 

பழைய தகரம் பிலாஸ்டிக் போத்தல்கள்.. துருப்பிடித்த பழைய  செமன்  டின் கள் போன்றவையை சேர்த்து அவிப்பதாக கூறப்படுகின்றது. இதனாலேயே இதனை அருந்துபவர்கள் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகுகின்றனர். இது அதிகமான அளவில் உடல் நல கேட்டை ஏற்படுத்தக்கூடியது. இதனை அருந்துபவர்களுக்கு  சாதாரண சாராயம் போலல்லாது விரைவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக சிறுநீரகத்தை அதிகளவிலும் மிக விரைவாகவும் பாதிக்கிறது. உயிரிழப்புகளையும் அதிகம் ஏற்படுத்துகின்றது. ஆனால் இதனை அருந்தும் யாரும் இதை உணருவதில்லை.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் கசிப்பு உற்பத்தியும் விற்பனையும் நாடு முழுவதும் அதிகரித்து வருவது போல மலையகத்திலும் அதிகரித்து வருகிறது. தோட்டத்தொழிலாளர்களை இலக்கு வைத்து பல இடங்களில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அண்மையில் மிகவும் சூட்சமமான முறையில் பாழடைந்த வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட வந்த நபர் ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்தனர். 

குறித்த சுற்றிவளைப்பு மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை கவரவில பாடசாலை சந்தியில்  இடம்பெற்றுள்ளது. இதன் போது சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து கொண்டிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து கசிப்பு தயாரிப்பதற்காக தயார் நிலையில் இருந்து 60000 மில்லி லீற்றர் கோடாவும் மற்றும் 35 லீற்றர் கசிப்பு ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக மிகவும் இரகசியமான முறையில் மிகப்பெரிய அளவில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சுற்றி வளைப்பின் போது கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 இதேபோல  நுவரெலியா கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெத்துன்கம மாவத்தையில் இளைஞர்கள் நால்வரை கந்தப்பளை பொலிஸார்  கடந்த வெள்ளிக்கிழமை   கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வசிக்கும் கந்தப்பளை  கெமுனு மாவத்தை வீட்டுக்கு அருகில் நீர்த்தாங்கி ஒன்றுக்கு அருகில் கஞ்சா செடிகள் வளர்த்து பராமரிப்பு செய்து வந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டில் இவர்களை கந்தப்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கந்தப்பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த இளைஞர்களின் வீட்டுப்பகுதியை சுற்றி வலைத்த பொலிஸார் அங்கு தேடுதலில் ஈடுப்பட்ட போது தண்ணீர் தாங்கி ஒன்றுக்கு அருகில் வளர்க்கப்பட்ட மூன்றரை அடி உயரமான இரண்டு கஞ்சா செடிகள் கண்டுப்பிடிக்கப்பட்டன. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து பல இடங்களிலும் மலையகத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில்  அண்மையில் கச்சாமலை தோட்ட மக்கள் சிலர் பிரத்தியேகமாக எம்முடன் புஸ்சல்லாவை பிரதேசத்தில் ஹெல்பொட வடக்கு  ( காச்சாமலை) கிராமத்தில் நீண்டகாலமாக கசிப்பு  உற்பத்தியில்   சில குழுக்கள் ஈடுபட்டு வருவதாகவும் இதை நிறுத்துவதற்கு சில இளைஞர்கள் முற்பட்ட போதும்  அது சாத்தியப்படவில்லை என்று பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்  இதற்கு அருகாமையில் பாடசாலையும் இயங்கிவருகின்ற நிலையில்

இந்த  பிரதேசத்தை சேர்ந்தவர்கள் கசிப்பு பாவனையிலும் உற்பத்தியிலும் ஈடுபடுவது பல சமூக பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தாக்கத்தினால் நாடு முடக்கப்பட்ட நிலையில்  அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதிலேயே பல பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றோம் . ஆனால் தட்டு தடையின்றி கசிப்பு அனைவருக்கும் கிடைத்து விடுகின்றது.   

இதற்கு அடிமையானவர்கள் எவ்வவு பணம் கொடுத்தேனும் இதனை அருந்துகின்றனர். இதன் காரணமாக  குடும்பங்களில் பல வன்முறைகள் ஏற்படுகின்றன.

தினசரி  தோட்ட தொழிலாளர்கள் மற்றும் நாட்கூலி தொழிலாளர்கள் என பலரும் இந்த கசிப்பு சாராயத்தை குடித்துவிட்டு குடும்பங்களில் சண்டைகளோடும் கண்ணீரோடும் வாழ்கின்றனர். இதனால் சிறார்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. பாடசாலைகளுக்கு அருகில் இது போன்ற செயலில் பலர் ஈடுபட்டுள்ளதை செய்திகளில் அறிகின்றோம். 

இது எதிர்கால சந்ததிகளின் நல்வாழ்க்கையையும் பாதிப்பதாக அமைகின்றது.இது தொடர்பில் சம்மந்தப்பட்ட  அதிகாரிகள் செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரினதும் கோரிக்கையாக உள்ளது.  ஆயினும் பொலிஸாரின் தேடுதலில் அனைவரும்  சிக்குவதில்லை. அவர்கள் பொலி௧ாருக்கு அச்சப்படுவதும் குறைவாகவே உள்ளது.

அண்மையில்   வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - வறுத்தோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி வியாபாரம் இடம் பெறுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய பரிசோதனை செய்ய சென்ற பொலிஸார் சென்றபோது தாக்கப்பட்டதை பார்த்தோம்.

பொலிஸார் அவ்விடத்திற்கு சென்றபோது குறித்த வீட்டு பெண்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவர் அவ்விடத்திற்கு வந்தபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள் அந்த இளைஞன் தான் தங்களது வியாபாரம் தொடர்பான தகவலை பொலிஸாருக்கு வழங்கியதாக தெரிவித்து பொலிஸாருக்கு முன்னால் அந்த இளைஞனை  தாக்கினர். இதனால் காயமடைந்த அந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்டபோது அவர்களது உறவினரான அயல் வீட்டில் வசிக்கும் ஆண் ஒருவர் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தனர்.அந்த பெண்ணின் வீட்டில் இருந்து 40 லீட்டர்கள் கோடாவும் ஒரு லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கசிப்பு உற்பத்தி விற்பனையில் ஈடுபடும் குற்றத்தை  செய்பவர்கள் பொலிஸாருக்கும் அச்சப்படுவதில்லை என்பது தெரிவிக்கின்றது.  இது மிக பெரிய சமூதாய பேரழிவு என்றே  கூற வேண்டும்.  ஊரடங்கு காலத்தில் இது மிக வேகமாக எல்லா இடத்திலும் அதிகரித்து செல்கின்றது. இதில் இருந்து நமது சமூதாயத்தை காப்பாற்ற வேண்டுமெனில் நாம் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.