(நா.தனுஜா)

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) மொஹமட் சாத் கட்டாக் இன்றைய தினத்துடன் அப்பதவியிலிருந்து ஓய்வுபெறும் நிலையில், உயர்ஸ்தானிகராகப் பதவிவகித்த இதுவரையான காலப்பகுதியில் இலங்கை மக்கள் காண்பித்த அன்பிற்கும் மரியாதைக்கும் அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

 

அதேவேளை இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் நாம் வழங்கிய ஆதரவை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அதற்காக நன்றி பாராட்டுகின்ற இலங்கை அரசாங்கத்தைப் பெரிதும் வரவேற்கின்றோம். 

இருப்பினும் இலங்கைக்கு மிக நெருங்கிய அண்டை நாட்டின் பிராந்திய புவிசார் அரசியல் நெருக்கடிகளால் காண்பிக்கப்படும் சமிக்ஞைகளால் இலங்கை - பாகிஸ்தானுக்கு இடையிலான பரஸ்பர நல்லுறவு முயற்சிகள் சிதைக்கப்படுகின்றன என்றும் மொஹமட் சாத் கட்டாக் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் இன்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் மூலம் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெறும் விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை உயர்ஸ்தானிகர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் மொஹமட் சாத் கட்டாக் அவ்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

மிகவும் சவாலானதும் கௌரவமானதுமான சேவையான இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் பதவியிலிருந்து இன்றைய தினம் ஓய்வுபெறுகின்றேன். 

கொவிட் - 19 வைரஸ் பரவல் மற்றும் இராஜதந்திர ரீதியிலான பொறுப்புக்கள் ஆகியவற்றால் இந்தப் பதவி எனக்கு சவாலானதாக இருக்கவில்லை. மாறாக இலங்கை மக்கள் எனக்கும் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கும் அளித்த மரியாதை மற்றும் அன்பிற்கு ஈடாக சேவையாற்றுவதே மிகவும் சவாலான விடயமாகக் காணப்பட்டது.

 

கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக முகங்கொடுக்க நேர்ந்த சவால்கள் மற்றும் எமது அண்டை நாட்டின் அதிருப்தி ஆகியவற்றுக்கு மத்தியிலும் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சகோதரர்களுடன் பழகுவதற்கும் சேவையாற்றுவதற்கும் எனக்கு வாய்ப்புக்கிடைத்தது.

யாழ்ப்பாணம் தொடக்கம் அம்பாந்தோட்டை வரையிலும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை தொடக்கம் கொழும்பு வரையிலும் நான் மேற்கொண்ட ஒவ்வொரு விஜயத்தின்போதும், இலங்கையர்கள் எமது (பாகிஸ்தான்) நாட்டின்மீது கொண்டிருக்கும் அன்பையும் மரியாதையையும் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிந்தது. இதற்கு நாம் எப்போதும் நன்றியுடைவர்களாக இருப்போம்.

 

இவ்வருட ஆரம்பத்தில் பாகிஸ்தான் பிரதமரின் இலங்கைக்கான விஜயத்தின்போது அவருக்கு அளிக்கப்பட்ட அமோக வரவேற்பு மற்றும் வெற்றிகரமான முறையில் நிறைவிற்குவந்த அவரது விஜயம் என்பன இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நல்லுறவு மற்றும் மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தன.

 

மேலும் இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் நாம் வழங்கிய ஆதரவை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அதற்காக நன்றி பாராட்டுகின்ற இலங்கை அரசாங்கம், இராணுவம் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் பெரிதும் வரவேற்கின்றோம். 

இருப்பினும் இலங்கைக்கு மிகநெருங்கிய அண்டை நாட்டின் பிராந்திய புவிசார் அரசியல் நெருக்கடிகள் காரணமாகக் காண்பிக்கப்படும் சமிக்ஞைகளால் எமது இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நல்லுறவு முயற்சிகள் சிதைக்கப்படுகின்றன. 

ஆனால் இலங்கையின் நெருங்கிய அண்டை நாடாக இல்லாதபோதிலும், ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டதைப்போன்று, எப்போதும் பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படும்.

 

இலங்கையில் பௌத்ததேரர்களுடனான எனது சந்திப்பு மற்றும் கலந்துரையாடலின்போது என்மீது காண்பிக்கப்பட்ட அன்பு, மரியாதை மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றின் மூலம் மதநல்லிணக்கத்திற்கான அவர்களது நேர்மறையான பங்களிப்பை நான் நன்கு உணர்ந்துக்கொண்டேன். 

அதுமாத்திரமன்றி கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையின் பௌத்ததேரர்கள் பாகிஸ்தானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். அதன்மூலம் அண்டைநாடுகளின் ஊடகங்களினால் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரசாரங்களுக்குப் புறம்பான வகையில், பாகிஸ்தானிலுள்ள பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தினால் (பாகிஸ்தான்) காண்பிக்கப்படும் கரிசனை வலுவாக உறுதிப்படுத்தப்பட்டது.

 

அதுமாத்திரமன்றி பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் அண்மையில் தயாரிக்கப்பட்ட 'பாகிஸ்தானின் காந்தாரா - பௌத்த பாரம்பரியம்' என்ற ஆவணப்படம் விரைவில் வெளியிடப்படும்.

இம்முயற்சி எமது இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும். 

நிறைவாக இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராக நான் சேவையாற்றிய காலப்பகுதியில் இந்நாட்டு அரசாங்கத்தினாலும் மக்களாலும் காண்பிக்கப்பட்ட ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, அடுத்துவரக்கூடிய உயர்ஸ்தானிகருக்கும் அதேபோன்ற ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.