குமார் சுகுணா 

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் டில்லி நேற்று ஸ்தம்பித்தது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன சாரதிகள் திக்குமுக்காடினர்.

 இந்தியாவில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நேற்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விவசாய சங்கங்களை பொறுத்தவரையில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதியிலிருந்து தலைநகர் டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர். மழை, வெயிலை பொருட்படுத்தாமல் கடந்த 10 மாதங்களை கடந்து இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ரயில் மறியல், சாலை மறியல், உண்ணாவிரத போராட்டம், டிராக்டர் பேரணி உள்ளிட்ட பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்தியும் விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு தற்போது வரை செவிசாய்க்கவில்லை.

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆதரவும் எதிர்ப்புமாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த நிலையில் சட்டம் என்ன சொல்கிறது, எதிர்க்கட்சிகள் என்ன சொல்கின்றன என்பது குறித்து பார்ப்போம்.

`மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை வஞ்சிக்கின்றன' என்பது எதிர்க்கட்சிகளின் வாதம். ஆனால், ``வேளாண் மசோதாக்கள் பற்றி எதிர்க்கட்சிகள் பொய் சொல்லிவருகின்றன'' என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

மத்திய பா.ஜ.க. அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு அதிரடிச் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டுவருகிறது. அவை ஒவ்வொன்றும் ஆதரவு - எதிர்ப்பு எனப் பல்வேறு தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. அந்த வரிசையில், வேளாண்துறையில் மூன்று புதிய சட்டத்திருத்தங்களை அண்மையில் கொண்டுவந்திருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.

மூன்று சட்டங்களில் முதலில் நாம் பார்க்கவிருப்பது, `விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020'

இந்தச் சட்டம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழலைக் கருத்தில்கொண்டு, விலையை உறுதிப்படுத்தி, விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அதாவது, தங்கள் விளைநிலத்தில் விளைவிக்கப்போகும் உற்பத்திப்பொருள் குறித்து பெரு நிறுவனங்களுடன் விவசாயிகள் முதலிலேயே ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். பின்னர், விளைவித்த பொருளை ஏற்கனவே ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்கும் விலைக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமே விற்றுக்கொள்ளலாம் என்பதுதான் இந்த சட்டத்தின் சாராம்சம்.

பெரு நிறுவனங்கள் விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, ஒப்பந்த முறையில் விளைபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை வசதிகளை அதிகாரபூர்வமாக இந்தச் சட்டம் செய்துதருகிறது. இதன் மூலம் சொந்த நிலத்திலேயே விவசாயிகள் கூலிகளாக்கப்படுவார்கள். ஏற்கனவே கரும்பு விவசாயிகள் இது போன்று சர்க்கரை ஆலைகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டுதான் கரும்பு விவசாயம் செய்துவருகின்றனர். ஆனால், கரும்பைக் கொள்முதல் செய்த ஆலைகள், விவசாயிகளுக்கு உரிய தொகையை செலுத்தாததால், பல்வேறு சிக்கல்களும் வழக்குகளும் உருவாகியிருக்கின்றன.

மேலும், நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகளுக்குத் தேவையான கடனுதவி உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுக்க வேண்டியது ஓர் அரசின் கடமை. இப்படியான ஆக்கபூர்வமான விடயங்களை ஓர் அரசு செய்து தரும்போதுதான், விவசாயி தன் விளைபொருளுக்கான விலையை லாபகரமானதாக மாற்றுவதற்கான வழியும் உருவாகும். ஆனால், விவசாய உற்பத்திக்கான உதவிகளை அரசு நிர்வாகம் செய்யாமல் விலகிக்கொள்ளும்போது, அந்த வேலைகளைச் செய்துவரும் தனியார் பெரு நிறுவனங்கள், விவசாயிகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதைத் தவிர்க்க இயலாது. 

இதன் தொடர்ச்சியாக விவசாயி தன் விளைபொருளுக்கு லாபகரமான விலை நிர்ணயிப்பதும் கேள்விக்குறியாகிவிடும் சூழலே தொடரும். ஆக, இந்த ஒப்பந்தச் சட்டம் என்பது, பணம் படைத்தவர்கள் தங்கள் பண்ணை நிர்வாகத்தை அதிகாரபூர்வமாக செய்துகொள்ளவே வழிவகுக்கும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020.

அடுத்ததாக, நாம் பார்க்கவிருப்பது, 'வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020' `இதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை மாநிலம் தாண்டி இந்தியா முழுக்க எந்த வியாபாரியிடமும் விற்றுக்கொள்ளலாம். இதனால், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை, கூடுதல் லாபம் கொடுக்கும் வியாபாரியிடம் விற்று, லாபம் பார்க்க வழிவகை ஏற்படும்’ என்கிறது அரசுத் தரப்பு.

விவசாய சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் சொல்வது என்ன?

அதாவது, வியாபாரிகளும் இடைத்தரகர்களும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கொடுக்காமல், மிகக்குறைந்த விலையில் வாங்கி வருவதைத் தடுப்பதற்காகவே மாநில அரசால், `ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்' கொண்டுவரப்பட்டது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விவசாயிகள் கொண்டுவரும் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை அரசே நிர்ணயிக்கும். 

அதன் பிறகு மறைமுக ஏல முறையில் வியாபாரிகள் விளைபொருட்களை ஏலம் எடுத்துச் செல்வார்கள். இதன் மூலம் விளைபொருளுக்கு நட்டம் ஏற்படாது என்ற உறுதிநிலை விவசாயிகளுக்கு இருந்துவந்தது. `விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை' என்று விவசாயிகள் தொடர்ந்து குறைபட்டு வருவதையறிந்துதான், மாநில அரசே `குறைந்தபட்ச ஆதார விலை' ஒன்றை நிர்ணயித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்துவந்தது. 

`இந்தக் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தித்தாருங்கள்' என்றுதான் இதுநாள்வரையிலும் விவசாய சங்கங்கள் போராடிவருகின்றன. ஏனெனில், அரசு சாராத தனியார்கள் விவசாயிகளின் விளைபொருளுக்கு அரசின் ஆதாரவிலையைவிடக் கூடுதல் விலை கொடுக்கத் தயங்கியதே இதற்குக் காரணம். இந்நிலையில், `நேரடியாக தனியார்களிடமே கூடுதல் விலைக்கு விற்றுக்கொள்ளலாம்’ என்று இந்தப் புதிய சட்டம் சொல்வது சாத்தியமற்றது. 

ஏனெனில், சிறு, குறு விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை வெளி மாவட்டத்துக்கோ அல்லது மாநிலங்களுக்கோ எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம். இந்தச் சூழலில், குறிப்பிட்ட மாநிலங்களில் அதிக அளவில் உற்பத்தியாகும் விளைபொருள்களைப் பெரு நிறுவனங்களும், பன்னாட்டுக் கம்பனிகளும் அறிந்துகொண்டு, விவசாயிகளிடமிருந்து மொத்தமாகக் கொள்முதல் செய்வதற்கே இந்தப் புதிய சட்டம் வழிவகுக்கும். 

எனவே, `இது விவசாயிகளுக்கு ஆதரவான சட்டம் அல்ல... பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டம்' என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.இந்நிலையில், நேற்று ஒருநாள் அடையாள பாரத் பந்த்-திற்கு 40 சங்க பிரதிநிதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். நாடு தழுவிய வேலை நிறுத்தம் காலை 6 மணி முதல்  தொடங்கியது. 

அரியானா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் போராட்டத்திற்கு முக்கிய எதிர்கட்சிகளான காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

தலைநகர் டில்லியை சுற்றியுள்ள சிங்கூ, காசிப்பூர் உள்ளிட்ட எல்லை பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக தலைநகர் டில்லியில் இருந்து அரியானா வழியாக ராஜஸ்தான் மாநிலம் செல்லும் முக்கிய பகுதியாக உள்ள குருகுராமில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக பல கி.மீ. தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. விவசாயிகள் அனைத்து வழிகளையும் மறித்து போராட்டம் நடத்தினார்கள். குருகிராம், நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் ஏராளமான கார்கள் ஊர்ந்து சென்றன.

பல மாதங்களாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்ல. என்ற போதிலும் இது உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. நேற்று டில்லியில் விவசாயிகளின் போராட்டத்தால் வாகன நெரிசல் ஏற்பட்ட காட்சி மீண்டும் உலகளவில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.