கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்காவிற்கு வழங்கியமை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் -  ஐக்கிய மக்கள் சக்தி

By T. Saranya

28 Sep, 2021 | 06:58 PM
image

(நா.தனுஜா)

கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் அமெரிக்க நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின் விளைவாக நாட்டின் அனைத்துத் துறைகளுக்குமான மின்வழங்கலை நேரடியாகக் கட்டுப்படுத்துகின்ற உரிமை அந்நிறுவனத்தைச் சென்றடையும்.

இது நாட்டின் தேசிய பாதுகாப்பில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் அதேவேளை,  உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையிலான அதிகாரப்போட்டியின் கேந்திரநிலையமாக இலங்கை மாற்றமடைவதற்கும் வழிவகுக்கும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருக்கின்றது.

எனவே எமது நாட்டை நிர்வகிக்கின்ற அதிகாரத்தை உத்தியோகபூர்வமற்ற முறையில் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் வகையிலான இந்த ஒப்பந்தத்தை முழுமையாக இரத்துச்செய்வதற்கு அவசியமான தலையீடுகளை மேற்கொள்ளுமாறும் பௌத்த உயர்பீடங்களிடம் பிரதான எதிர்க்கட்சி வலியுறுத்தியிருக்கின்றது.

கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்டிருக்கும் நிலையில், இதுபற்றித் தெளிவுபடுத்தும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் நேற்று  திங்கட்கிழமை கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாசங்கத்தேரர்களுடன் சந்திப்பொன்றை நிகழ்த்தியிருந்தனர்.

இச்சந்திப்பின்போது அவர்கள் மகாசங்கத்தேரர்களிடம் கையளித்த 'நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அமெரிக்க நியூ ஃபோர்ட்ஸ் எனெர்ஜி ஒப்பந்தம்' என்ற தலைப்பிலான கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

கெரவலப்பிட்டியில் அமைந்துள்ள தேசிய மின்னுற்பத்திக் கட்டமைப்பின் மிகமுக்கிய விநியோக மத்தியநிலையமான யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்காவிற்குச் சொந்தமான நியூ ஃபோர்ட்ஸ் எனெர்ஜி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் தற்போதைய அரசாங்கத்தினால் கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு 12.06 மணிக்குக் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதுவரையிலும் இந்த ஒப்பந்தத்துடன் தொடர்புடைய நிபந்தனைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதுகுறித்து 2021.09.06 என்ற திகதியிடப்பட்ட யோசனையொன்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்த யோசனையில் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் பின்னர் அதுபற்றி அமைச்சரவைக்குத் தெளிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. எனவே ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட முன்னர், அதுபற்றி அமைச்சரவைக்கு வெறுமனே ஓர் அறிவிப்பு மாத்திரமே வழங்கப்பட்டிருக்கின்றது என்றால், இத்தகைய முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடு;ம்போது பின்பற்றப்படவேண்டிய உரிய நடைமுறை இங்கு மீறப்பட்டிருக்கின்றது என்பது புலனாகின்றது.

மேற்குறிப்பிட்டவாறு அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் பங்கு உரித்துக்களைப் பொறுத்தவரையில் 40 சதவீதமானவை அரசதிறைசேரிக்கும் 11 சதவீதமானவை இலங்கை ட்ரான்ஸ்ஃபோமர் நிறுவனத்தின் திறைசேரிக்கும் 23.9 சதவீதமானவை ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் 18 சதவீதமானவை இலங்கை மின்சாரசபையின் ட்ரான்ஸ்ஃபோமர் நிறுவனத்திற்கும் 7.1 சதவீதமானவை இலங்கை மின்சார நிறுவனத்திற்கும் சொந்தமானவையாக இருந்திருக்கின்றன. எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குள் இந்த நிலையத்தின் அனைத்துப் பங்குகளும் இலங்கை மின்சாரசபைக்குச் சொந்தமானவையாக மாறியிருக்கும்.

அவ்வாறிருக்கையில் அமைச்சரவையினதோ அல்லது பாராளுமன்றத்தினதோ அனுமதியின்றி அரசதிறைசேரிக்குச் சொந்தமான 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது. அதுமாத்திரமன்றி இங்கு நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள மற்றுமொரு மின்னுற்பத்தி நிலையம் மற்றும் கெரவலப்பிட்டியில் நிர்மாணிக்கப்படக்கூடிய எந்தவொரு மின்னுற்பத்தி நிலையத்திற்கும் அவசியமான எரிவாயுவை விநியோகித்தல், யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்திற்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவிற்கான விலையை நிர்ணயிப்பதற்குரிய விலைச்சூத்திரத்தை வெளியிடல், களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கான உட்கட்டமைப்பைத் தயார்ப்படுத்துவதெனின் அதற்குரிய பொறுப்பை வழங்குதல், அதற்கென வரிச்சலுகை அளித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் மேற்படி ஒப்பந்தத்தின் ஊடாக இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு எதிர்பார்க்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே பசில் ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மேற்படி ஒப்பந்தத்தில் மிகவும் பாரதூரமான விடயம் குறித்த அமெரிக்க நிறுவனத்திற்கு மின்னுற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பங்குகளை வழங்குவதல்ல. மாறாக நாட்டில் நிர்மாணிக்கப்படும் மின்னுற்பத்தி நிலையம், தற்போது இயங்கிவரும் மின்னுற்பத்தி நிலையம் உள்ளிட்ட அனைத்திற்கும் அவசியமான திரவ இயற்கை எரிவாயுவை விநியோகிக்கும் தனியுரிமையையும் அந்த அமெரிக்க நிறுவனத்திடம் வழங்குவதே பாரதூரமான விடயமாகும்.

அதனூடாக நாட்டின் அனைத்துத் துறைகளுக்குமான மின்வழங்கலை நேரடியாகக் கட்டுப்படுத்துகின்ற உரிமை குறித்த அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்படுவதன் ஊடாக உத்தியோகபூர்வமற்ற முறையில் எமது நாட்டை நிர்வகிக்கும் அதிகாரம் அவர்களைச் சென்றடையும். இது சுயாதீன நாடொன்றுக்கு எப்போதும் இழைக்கப்படக்கூடாத தேசத்துரோக செயற்பாடாகும்.

இதன்மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பின் மிகமுக்கிய கூறுகளான மின்சாரம் மற்றும் சக்திவலு, அரசியல் உறுதிப்பாடு, வலுவான உரிமைகள், ஸ்திரமான பொருளாதாரம் ஆகியவற்றின்மீதும் அழுத்தம் பிரயோகிக்கப்படக்கூடிய நிலையேற்படும்.

தற்போதைய அரசாங்கம் எதிர்கொண்டிருக்கும் வெளிநாட்டுக்கையிருப்பு நெருக்கடிக்குத் தீர்வுகாணும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற இந்தத் தீர்மானம் நாட்டின் தேசிய பாதுகாப்பில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதன் விளைவாக உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையிலான அதிகாரப்போட்டியின் மத்தியநிலையமாக இலங்கை மாறுவதைத் தடுக்கமுடியாதுபோகும். எமது வெளிவிவகாரக்கொள்கையிலும் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டாகும்போது எமது நாட்டின் சக்திவலுக்கட்டணத்தைத் தீர்மானிக்கின்ற அதிகாரமும் 2035 ஆம் ஆண்டாகும்போது முழுமையான மின்வழங்கல் கட்டணத்தைத் தீர்மானிக்கின்ற அதிகாரமும் மேற்படி அமெரிக்க நிறுவனத்திற்கு உரித்துடையதாக மாறும். எனவே மிகமோசமான இந்த ஒப்பந்தத்தை முற்றாக இரத்துச்செய்வதற்கு அவசியமான தலையீட்டை மேற்கொள்ளுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right