(நா.தனுஜா)

இலங்கையில் போரின்போது இராணுவத்தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்கள் படையினரால் கையகப்படுத்தப்பட்டதுடன் அதன்பின்னர் அவை பாதுகாப்புத் தேவைக்கென மாற்றியமைக்கப்பட்டன. அவற்றில் சில பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பொதுமக்களிடம் மீள வழங்கப்பட்டுள்ள போதிலும், மேலும் பல காணிகள் உரிய தரப்பினரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் காலங்காலமாக அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் வகையில் சோமீதரனால் இயக்கப்பட்ட 'தாய்நிலம் : நில அபகரிப்பு இலங்கைவாழ் தமிழ்மக்களின் உண்மையான பெருந்தொற்று' (Land Grabbing – The Real Pandemic For The Tamils In Sri Lanka) என்ற ஆவணப்படம் கடந்த சனிக்கிழமை இலங்கைநேரப்படி மாலை 5.30 மணிக்கு இணையவழியில் திரையிடப்பட்டது.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஆகியோரால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்நிகழ்வில், சுமார் 70 வருடகாலமாகத் தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு தொடர்பான அவர்களது உரைகளும் இடம்பெற்றன.

வட்டுவாகலில் இக்கரை என்று சொல்லக்கூடிய பகுதியில் நிலத்திற்கு மேலாக 400 ஏக்கர் காணி இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று வட்டுவாகல் அக்கரை என்று சொல்லக்கூடிய கரையோரப்பகுதியில் 617 ஏக்கர் நிலப்பரப்பில் கோட்டாபய கடற்படைமுகாம் அமைக்கப்பட்டிருப்பதுடன் வனஜீவராசிகள் திணைக்களம் என்றுகூறி நந்திக்கடல் நீரேரியும் அதனை அண்டிய நிலப்பரப்புமாக 10229.92 ஏக்கர் காணியும் அபகரிக்கப்பட்டிருப்பது குறித்து 'தாய்நிலம்' ஆவணப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

'போரின்போது இராணுவத்தினரின் தேவைக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்கள் கையகப்படுத்தப்பட்டதுடன் அதன்பின்னர் அவை பாதுகாப்பு என்ற தேவைக்குரியவையாக மாற்றப்பட்டன. இருப்பினும் இவை மிகக்குறைந்தளவிலான சுயாதீன கண்காணிப்பு, இழப்பீடு வழங்கல் என்பவற்றுடனோ அல்லது சுயாதீன கண்காணிப்பு மற்றும் இழப்பீடு வழங்கல் என்பன ஏதுமின்றியோ கையகப்படுத்தப்பட்டன.

அவற்றில் சில இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மீள வழங்கப்பட்டுள்ள போதிலும், மேலும் பல காணிகள் மீள வழங்கப்படவில்லை' என்று இந்த ஆவணப்படத்தில் பேசியிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் ஏக்கர் விபரம், மற்றும் தமிழரின் வாழ்விடங்களில் பௌத்த சின்னங்கள் காணப்படுவதாகக்கூறி முன்னெடுக்கப்படும் தொல்பொருள் அகழ்வாராய்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டதன் பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவருகின்ற நில அபகரிப்பு தொடர்பிலான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது. அக்கலந்துரையாடலில் இஸ்ரேல் நாட்டைச்சேர்ந்த பிரபல ஆய்வாளரும் நில அபகரிப்பு தொடர்பான பேராசிரியருமான ஓரென் யிஃ;ப்ரசெல் விசேட உரையொன்றினை நிகழ்த்தினார்.

பாலஸ்தீன நிலங்களை அபகரிப்பது குறித்து தனது இஸ்ரேலிய அரசாங்கத்தைத் துணிச்சலுடன் விமர்சித்திருக்கும் அவர், இஸ்ரேலை ஒத்த 'இனவாத ஆட்சியே' இலங்கையிலும் காணப்படுகின்றது என்று தெரிவித்திருக்கின்றார். அதுமாத்திரமன்றி இஸ்ரேல் - பாலஸ்தீனம் மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளிலும் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பின் ஒத்த தன்மையை வெளிப்படுத்தும் வகையிலான ஆய்வுகளையும் அவர் இக்கலந்துரையாடலில் பகிர்ந்துகொண்டார்.

அதேவேளை இந்தியாவில் சுமார் 30 வருடங்களுக்கும் அதிகமான காலம் மக்களின் நில உரிமைக்காகத் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்துவரும் செயற்பாட்டாளரான கலாநிதி மேதா பட்கார், இலங்கையில் இடம்பெற்றுவந்த மூன்று தசாப்தகாலப்போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னரும் வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக நில அபகரிப்புக்கள் இடம்பெற்றுவருவதாகவும் ஆரம்பத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்கெனவும் இப்போது சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கெனவும் காரணம் கூறப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் தமிழீழ விடுதலைப்புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் பாராட்டப்படக்கூடியது அல்ல என்றாலும்கூட, அப்போராட்டத்திற்கு வழிவகுத்த அடக்குமுறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்தோடு போர் இடம்பெற்ற காலப்பகுதியில் படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்படும் என்று ராஜபக்ஷ அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த போதிலும் இன்னமும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது குறித்து சுட்டிக்காட்டிய மேதா பட்கார், நில அபகரிப்பு என்பது ஒரு சமுதாயத்தின் வரலாற்று மற்றும் வாழ்வியல் அடையாளங்களை அழிக்கும் அதேவேளை அவர்களது வாழ்வாதாரத்தையும் முழுமையாகப் பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஏற்கனவே அபகரிக்கப்பட்ட நிலங்கள் பொதுமக்களிடம் மீளவும் கையளிக்கப்படுவதற்கான அழுத்தங்களை இலங்கைமீது சர்வதேச சமூகம் பிரயோகிக்கப்படவேண்டும் என்றும் அதனை வலியுறுத்தி பெண்களின் தலைமைத்துவத்தின் கீழான அமைதிவழி (சத்தியாக்கிரகப்போராட்டங்கள்) போராட்டங்கள் எழுச்சிபெறவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.  

மேலும் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள 'த ஓக்லன்ட் இன்ஸ்டிடியூட்' என்ற கல்வியகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரான அனுராதா மிட்டாலும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தார். அவர் இலங்கையில் இடம்பெறும் நில அபகரிப்புக்கள் தொடர்பில் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ஆய்வுகளை முன்னெடுத்துவந்திருப்பதுடன் அதன் முடிவுகளை ஏற்கனவே பகிரங்கப்படுத்தியிருக்கின்றார்.

2014 ஆம் ஆண்டின் பின்னரைப்பாகத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் நிலைவரங்கள் மிகத்தீவிரமான கட்டத்தை அடைந்தபோது, இலங்கைக்கு மிகத்துணிகரமான பயணமொன்றை மேற்கொண்ட அனுராதா மிட்டேல் வடக்கு - கிழக்கு மாகாணங்களிலுள்ள பல இடங்களுக்கும் விஜயம்செய்து, பல்வேறு தகவல்களைத் திரட்டியதுடன் அவற்றைத் தொகுத்து 2015 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 'நீண்டகாலப்போரின் நிழல் : இலங்கையில் போரின் பின்னரான காலப்பகுதியில் நீதியை நிலைநாட்டுவதில் காணப்படும் சவால்கள்' என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை சர்வதேச நாடுகள் பலவற்றுக்கும் வெளிப்படுத்திய முக்கிய ஆவணமாக இந்த ஆய்வறிக்கை நோக்கப்படுகின்றது.

அத்தோடு இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள்மீது மிகுந்த அக்கறைகொண்டு அவர்களது நிலை தொடர்பில் நீண்டகாலமாக ஆய்வுகளை முன்னெடுத்துவருகின்ற சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராமு மணிவண்ணனும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.