இராஜதுரை ஹஷான்

அரச  காணிகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்குவதாகவும் , நில ஆக்கிரமிப்பு திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ  முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது. அரச காணிகள் தேசிய தொழில் முயற்சியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன. 

விவசாயிகள் நெல்லை  விநியோகிபப்பதற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாகவே ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது  என காணி விவகார அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

காணி அமைச்சுக்கு சொந்தமான காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களில் இறக்குமதி செய்யப்படும் பழங்களை உற்பத்தி செய்ய முடியும்.அப்பில், பெயாஸ், திராட்சை , மஞ்சள் தோடம்பழம் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கு முயற்சியாளர்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

 முழுமையான விருப்பம் இல்லாத நிலையில் அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. தேசிய உற்பத்திகளை வலுப்படுத்த  வேண்டும். என்பதற்காக 2019ஆம் ஆண்டுக்கு பிறகு அரிசி இறக்குமதி ஒப்பீட்டளவில் குறைக்கப்பட்டது. ஆட்சி பொறுப்பை  ஏற்கும் போது  ஒரு கிலோகிராம் நெல்லுக்கான உத்திரவாத விலை 30 ரூபாவாக காணப்பட்டது. 

இருப்பினும் கடந்த ஒன்றரை வருட காலத்தில் ஒரு கிலோகிராம் நெல்லின் உத்தரவாத விலை 55 ரூபா தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நெல்லுக்கான உத்தரவாத விலை அதிகரிக்குமாறு குறிப்பிட்டுக் கொண்டு விவசாயிகள் நெல்லை  விநியோகிப்பதில்லை. இதனால் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய  தேவை ஏற்பட்டுள்ளது.

சந்தையில்  அரசி தட்டுப்பாடு ஏற்பட கூடாது என்பதை கருத்திற் கொண்டு ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய  அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என்றார்.