கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையில் சிக்கி தவிக்கும் அவுஸ்திரேலியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை பதிவான 1,700 புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையோடு, அங்கு பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100,732 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், நியூசவுத் வேல்ஸில் மாநிலத்தில் தலைநகர் சிட்னியில் 863  புதிய கொரோனா தொற்றாளர்களும், 7 மரணங்களும் பதிவாகியுள்ளது.

அங்கு இதுவரை 316 மரணங்கள் பதிவாகியுள்ளதாக நியூசவுத் வேல்ஸ் சுகாதார திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்னை தலைநகராக கொண்ட இரண்டாவது அதிக சனத்தொகை கொண்ட விக்டோரியா மாநிலத்தில் மேலும் 867 புதிய தொற்றாளர்களும் மற்றும் நான்கு மரணங்களும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் வீட்டிலேயே தங்களைத் தாங்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள முடியும் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட்  தெரிவித்துள்ளார்.

சுய பரிசோதனையில் தொற்றுறுதியான எவரும் பி.சி. ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.