நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் சரிவர நிறைவேற்றாத நல்லாட்சி அரசாங்கம் புதிய பிரச்சினைகளை உருவாக்கி நாட்டு மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக கொப்படியாகொட சிறிவிமல தேரர்  தெரிவித்துள்ளார்.

"புதிய அரசியலமைப்பு மரணப்பொறி" என்ற பிரசாரத்தை தேசிய சுதந்திர முன்னணி நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் நிலையில் அதன் ஒரு அங்கமா கொப்படியாகொட சிறிவிமல தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட போதே தே.சு.மு.யின் தலைவரான விமல் வீரனவன்சவிடம் தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போது எமது நாட்டு மக்களுக்கு புதியதொரு அரசியலமைப்பு அவசியமில்லை. தற்போதுள்ள அரசிலமைப்பின் குறைபாடுகளை நிவர்த்தி செய்துக்கொண்டு நாம் முன்னநர்ந்துச் செல்ல முடியும். தற்போதுள்ள அரசியலமைப்பில்  மாற்றம் செய்யுமாறு அரசாங்கத்திடம் எவரும் கேட்கவில்லை.  மாறாக நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே தற்போதைய ஆட்சியாளர்களிடத்தில் நாடு கையளிக்கப்பட்டது. 

எனவே இவர்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அதற்கு மாறாக இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி அதனூடாக மக்கள் குழுக்கள் மத்தியில் முறுகல் நிலைகளை ஏற்படுத்திவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். அதனால் தேசிய சுதந்திர முன்னணி முன்னெடுத்துச் செல்லும் தெளிவுபடுத்தல் செயற்பாடுகள் பாராட்டுக்குரியது.

தற்போது உருவாக்கப்பட்டு வரும் அரசியலமைப்பு நாட்டை சீரழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதே எமது நிலைப்பாடாகின்றது. அத்துடன் இந்த நிலைப்பாட்டினை உணர்ந்து அரசியலமைப்பு புத்துருவாக்க செயற்பாடுகளிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி விலகியிருந்தாலும் கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கின்ற சிலர் தற்போதும் அரசியலமைப்பு புத்துருவாக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் குழுக்களில் உள்ளனர் அவர்களும் இந்தச் செயற்பாடுகளிலிருந்து விலகி நிற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.