• தகவல் அறியும் உரிமை தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டுவதில் அரசாங்கத்துக்கு அக்கறை உள்ளதாக தெரியவில்லை
  • உலகிலேயே சக்திமிக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தை கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கை 4 ஆவது இடத்தில்
  • ஊடகவியலாளர்களை விட சாதாரண குடிமகனுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மிகப் பெரும் வாய்ப்பு
  • சிரேஷ்ட சட்டத்தரணி ஜகத் லியன ஆரச்சி கேசரிக்கு  விஷேட செவ்வி 

(எம்.எப்.எம்.பஸீர்)

உலகிலேயே சக்தி மிக்க உறுதியான தகவல் அறியும் உரிமை சட்டங்களைக் கொண்டுள்ள நாடுகளில் 4 ஆவது இடத்தில் உள்ள இலங்கைக்கு, குடிமகன் ஒருவர் கோரும் முன்னரேயே தகவல்களை வெளிப்படுத்துவது தொடர்பிலான விடயத்தில் பாரிய முன்னேற்றம் அவசியமாவதாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜகத் லியன ஆரச்சி தெரிவித்தார்.  அவ்வாறு தகவல்களை வெளிப்படுத்துவது தொடர்பில் 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க  தகவலுக்கான உரிமை சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ள போதும், இலங்கையில் அது வெற்றிகரமாக இடம்பெறுவதாக அவதானிக்க முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச தகவல் அறியும்  உரிமை தினம் ஒவ்வொரு  ஆண்டும் செப்டம்பர் மாதம் 28 அம் திகதி கொண்டாடப்படுகிறது. அத்தினத்தை முன்னிட்டு குறித்த தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அதன் பயன்பாடு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஜகத் லியன ஆரச்சி கேசரிக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டார்.

அவர் அளித்த விஷேட செவ்வி வருமாறு:

கேள்வி:  தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும்  அதன் பயன்பாடு  தொடர்பில் எவ்வாறான சூழ் நிலை ஒன்று தற்போது நிலவுகிறது?

பதில்: தகவல் அறியும் உரிமை  2015 ஆம் ஆண்டு எமது அரசியலமைப்பு ஊடாக அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.  எனினும் அப்போதும் உலகின் பல நாடுகள் அந்த உரிமையை ஏற்றுக்கொண்டிருந்தன.

அதனடிப்படையிலேயே 2016 ஆம் ஆண்டு  தகவல் அறியும் உரிமைச் சட்டம்  இலங்கையில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் நிறைவேற்றப்படும் போதும், 112 உலக நாடுகளில் அவ்வாறான சட்டங்கள் அமுலில் இருந்தன.  தெற்காசியாவில் அச்சந்தர்ப்பத்தில் இலங்கையிலும் பூட்டானிலும் மட்டுமே தகவல் அறியும்  சட்டம் அப்போது காணப்படவில்லை. இன்னொரு வகையில் சொல்வதென்றால் தெற்காசியாவில் இறுதியாக தகவல் அறியும் உரிமையை  சட்ட ரீதியாக உறுதி செய்த  நாடாக இலங்கையைக் கூறலாம்.

எமது நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தகவலுக்கான உரிமைச் சட்டம், உலக அளவில் நாடுகளில் அமுலிலுள்ள சட்டங்களுடன் ஒப்பீடு செய்யும் போது மிக வலுவானது. அதன்பிரகாரம் எமது சட்டம் உலக நாடுகளில் சக்தி மிக்க தகவலுக்கான சட்டங்களில் 4 ஆவது இடத்தைப் பிடிக்கிறது.

உண்மையில் இந்த சட்டம்  ஊடாக யாருக்கு என்ன நன்மை என  ஒருவர் யோசிக்கலாம். ஆம், உண்மையில்  நாட்டின் சாதாரண ஒரு குடிமகனுக்கே இச்சட்டம் ஊடாக அதிக நன்மை காணப்படுகிறது.  இன்று பலர் இச்சட்டம் ஊடகவியலாளர்களுக்கானது என எண்ணுகின்றனர். அது அவ்வாறல்ல. ஊடகவியலாளர்களை விட இந்த சட்டம் சாதாரண குடிமக்களுக்கே பயனுள்ளது.

அரசின் உயர் மட்டத்தின் பொறுப்பில் அல்லது உயர் மட்ட அதிகாரிகளின் பொறுப்பில் உள்ள ஒரு தகவலை, சாதாரண குடிமகன் ஒருவன் வேறு சட்டங்களின் கீழ்  அல்லது பொதுவாக  பெற்றுக்கொள்ள முற்பட்டால் உண்மையில் அந்த தகவலை அவரால் பெற்றுக்கொள்வது சாத்தியப்படாது.

எனினும் தகவலுக்கான உரிமை சட்டத்தின் கீழ் அவர் அந்த தகவல்களை கோரும் போது மிக இலகுவாக அதனைப் பெற்றுக்கொள்ள முடியுமானதாக இருக்கும்.

கேள்வி: அப்படியானால் தகவல் உரிமைக்கான சட்டம் இலங்கையில் வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகிறது  என கூற விளைகின்றீர்களா?

பதில்: இல்லை. இந்த தகவலுக்கான உரிமை சட்டம்  குடிமக்களின் தகவல் உரிமையை உறுதி செய்ய கொண்டுவரப்பட்டது. அச்சட்டத்தில்,  சில தகவல்களை குடிமக்கள் கோராமலேயே வெளிப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் உள்ளன.  இலங்கையில் அந்த ஏற்பாட்டின் செயற்பாடு வெற்றிகரமாக அமுலாவதாக அவதானிக்க முடியவில்லை.

எனினும் தனி நபர் கோரிக்கைகளுக்கு அமைய தகவல் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் திருப்திகரமாக நடக்கிறது.

கேள்வி: தகவல் அறியும் உரிமை தொடர்பில் குடி மக்களிடம் போதிய தெளிவு இருக்கிறதா?

பதில்:  உண்மையில் ஒவ்வொரு  ஆண்டும் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி சர்வதேச தகவல் அறியும் உரிமை தினமாக கொண்டாடப்படுகிறது. இது யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட தினம்.

இத்தினத்தில் தகவல் அறியும் உரிமையின் தாற்பரியத்தினை மக்களிடையே கொண்டு சேர்ப்பது அது சார்ந்தவர்களின்  கடப்பாடாகும்.

இந்த தினத்தை நாம் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகின்றோம். அதன்படி கடந்த 2016,2017,2018 ஆம் ஆண்டுகளில் இந்த தினத்தில் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்த சில நடவடிக்கைகள் அரச மட்டத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றன. அரச அனுசரணையில் கொண்டாட்டங்களும் இடம்பெற்றன.

ஆனால் கடந்த 2019  ஆம் 2020 ஆம் ஆண்டுகளில் தகவல்  அறியும் உரிமை தொடர்பிலான சர்வதேச தினத்தில் கூட மக்களை அறிவூட்டும் அல்லது, அத்தினத்தை  கொண்டாடும் எந்த அரச அனுசரணை நடவடிக்கைகளையும் காண முடியவில்லை. இந்த ஆண்டும் அதே நிலைமை நீடிப்பதாகவே தெரிகிறது.

தகவலுக்கான உரிமை சட்டத்தின் பிரகாரம், இரு தரப்பினர் மிக முக்கியமானவர்கள்.

ஒருவர் தன்வசம் வைத்திருக்கும் தகவல்களை விநியோகிப்பவர். மற்றையவர் தகவலுக்கான தேவை உள்ள குடிமகன்.

தகவல்களை வைத்திருப்போர் தகவல்களை வெளிப்படுத்த வேண்டும். உண்மையில்,  தகவலுக்கான உரிமை தொடர்பிலான எமது சட்டத்தின் பிரகாரம், குடிமகன் கோருவதற்கு முன்னதாகவே தகவல்கலை வெளிப்படுத்த ஏற்பாடுகள் உள்ளன. அதனடிப்படையில் செயற்பட்டால், குடிமக்கள் விண்ணப்பித்து தகவல்களை பெறும் நிலை குறைவடையும்.

ஐரோப்பிய நாடுகளில் இந் நிலைமை வெற்றிகரமக உள்ளதாலேயே அங்கு குவியும் விண்ணப்பங்கள் குறைவு.

எனினும் அமது நாட்டில் இன்னும் அந்நிலைமை வளர்ச்சியடையவில்லை.

கேள்வி: அப்படியானால் தகவலறியும் உரிமைக்கான ஆணைக் குழுவின் வகிபாகம் இந்த விடயத்தில் என்ன?

பதில் : இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு 2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமை சட்டத்தின் 11ஆம் பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.  தகவறியும் உரிமைக்கான சட்டத்தின் செயற்பாட்டை கண்காணிக்கும்,  அமுல்படுத்தும் பிரதான நிறுவனமாக  அந்த ஆணைக் குழு திகழ்கிறது.  குறித்த சட்டத்தின் கீழ் குற்றமிழைக்கும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் மீதான  விசாரணை செய்வதற்கும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை சிபாரிசு செய்வதற்கும் அதிகாரங்களைக் கொண்டுள்ள ஒரு  ஆணைக் குழுவே இது.  சட்டத்தில் வரைவிலக்கணம் செய்த குற்றங்களைச் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த  அவ்வாணைக்குழுவுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

பராளுமன்ற சபையின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவரையும், 4 உறுப்பினர்களையும் அங்கத்தவர்களாக இவ்வாணைக் குழு கொண்டிருக்கும்.  19 ஆவது அரசியல் திருத்தம் ஊடக கொண்டுவரப்பட்ட இந்த ஆணைக் குழு, அரசியலமைப்பு பேரவையால் சிபாரிசு செய்யும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் 20 ஆம் திருத்த சட்டத்தின் 59 ஆவது அத்தியாயம் பிரகாரம், அரசியலமைப்பு பேரவை எனும் நிலைமைக்கு பதிலாக பாராளுமன்ற சபை என்பது  அனைத்து இடங்களிலும் உபயோகம் செய்தல் வேண்டும் என்பதால், இவ்வாணைக் குழுவுக்கான உறுப்பினர்கள் தற்போதைய சூழலில் பாராளுமன்ற சபையின் சிபாரிசில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்.

கேள்வி: உண்மையில் இந்த தகவல் அறியும் சட்டத்தால் பொது மக்களுக்கு என்ன இலாபம்?

பதில்: ஒரு போதும் அவ்வாறு எண்ணிவிடக் கூடாது. இதன் அனைத்து பலனும் சாதாரண குடிமகன் ஒருவருக்கே உள்ளது.

உதாரணமாக ஒருவர் ஒரு நேர்முகத் தேர்வுக்கு செல்கிறார். அவர் குறித்த வேலைக்கு தேர்ந்தெடுக்கபப்டவில்லை. அவரைவிட குறைவாக  புள்ளி எடுத்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அவருக்கு சந்தேகம் ஏற்பட்டால், அவரால் அந்த நேர்முகத் தேர்வு தொடர்பில் குறித்த அரச  நிறுவனத்திடம் முழுமையான புள்ளிப்பட்டியலை தகவலறியும் சட்டம் ஊடாக கோரி தனது சந்தேகத்தை தீர்க்க முடியும்.

அவ்வாறே, தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக, பாடசாலைக்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக,  தமது பிரச்சினைகள் தொடர்பிலான தீர்வுகளுக்காக என எல்லா விடயத்துக்கும் இது மிகப் பெறும் உதவியாக இருக்கும்.

இன்று பல உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் அப்பதவியில் இருக்க இந்த சட்டமே காரணம். இச்சட்டத்தின் உதவியுடன் அவர்கள் பெற்றுக்கொண்ட தகவலை வைத்து அவர்கள் உயர் நீதிமன்றை நாடினர். அதன்பலனாக அவர்கள் இன்று அப்பதவிகளில் உள்ளனர். இந்த சட்டம் படித்தவர் முதல் பாமரர் வரை அனைவருக்கும் மிக சமீபமானது.

உதாரணத்துக்கு ஒரு விடயத்தை கூறுகின்றேன்.

அண்மையில் மொனராகலை மேல் நீதிமன்றால் ஒரு வரலற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு பல்வேறு வகையில் இலஞ்சம் கொடுத்தமை நிரூபிக்கப்பட்டதால், ஶ்ரீ.ல.பொ.பெ கட்சியின் மொனராகலை பிரதேச சபை உறுப்பினர் டி.எம். ஹர்ஷக பிரிய திஸாநாயக்கவை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய, மொனராகலை மேல் நீதிமன்றம் கடந்த 13 ஆம் திகதி உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பிலான வழக்கு பெப்ரல் அமைப்பினரால் தொடரப்பட்டதாகும்.

உண்மையில் அவ்வழக்கில், குறித்த உறுப்பினர், மின்சார, நீர் விநியோக இணைப்புக்கள் ஊடாக அந்த தேர்தல் கால இலஞ்சத்தை வழங்கியமையே குற்றச்சாட்டு.

இந்நிலையில் நீதிமன்றில் அதனை நிரூபிக்க பயன்படுத்திய பிரதான சாட்சி, தகவல் அறியும் சட்டம் ஊடாக பெறப்பட்ட மின், நீர் இணைப்புக் கட்டண ரசீதுகள். அனைத்து ரசீதுகளிலும் குற்றவளியாக காணப்பட்ட உறுப்பினரே பணம் செலுத்தியதாக இருந்தன. சாதாரணமாக ஒருவர், மின்சார சபையிடம், வேறு ஒருவரின்  பணம் செலுத்திய ரசீதினை கேட்டால் வழங்கப்படமாட்டாது. தகவல் அறியும் சட்டம் ஊடாக கோரப்பட்டால் வழங்கப்படும்.

எனவே இந்த தகவல் அறியும் சட்டம் நட்டில்  இலஞ்ச ஊழலை ஒழிக்கவும் மிகப் பெறும் ஆயுதமக பயன்படுத்த முடியுமானது.