(எம்.மனோசித்ரா)

எதிர்வரும் காலங்களில் பொது இடங்களுக்குள் நுழையும் போது முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதற்கான அட்டையை பரிசோதிப்பதற்கான முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்  கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் இலங்கைக்கான எகிப்து தூதுவர் ஹூசைன் எல் சஹார்டி ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு சமாந்தரமாக தடுப்பூசி வழங்கலில் இலங்கையின் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக எகிப்து தூதுவர்  தெரிவித்துள்ளார். இதற்காக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு மதிப்பளிப்பதாகவும் எகிப்து தூதுவர் தெரிவித்தார். எகிப்தில் சைனோவெக்ஸ் தடுப்பூசி மற்றும் கொவிட் தொற்றுக்கு வழங்கக் கூடிய மருந்துக்கள் தயாரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, நாட்டில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தற்போது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதோடு, 20 - 29 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கல் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக எதிர்வரும் காலங்களில் பொது இடங்களுக்குள் நுழையும் போது முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதற்கான அட்டையை பரிசோதிப்பதற்கான முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.