(நெவில் அன்தனி)

மாலைதீவுகளின் தலைநகரான மாலேயில் நடைபெறவுள்ள தெற்காகிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் (SAFF) போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணி, சவூதி அரேபியாவிலிருந்து இன்று இரவு புறப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக மாலைதீவுகனை நாளை செவ்வாய்க்கிழமை சென்றடையவுள்ளது.

சவூதி அரேபியாவில் ஒரு வார காலமாக பயிற்சிபெற்றுவந்த இலங்கை அணி, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஜுப்பா எவ்.சி. (3ஆம் பிரிவு கழகம்) அணியுடனான சிநேகபூர்வ பயிற்சிப் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் மாலைதீவுகள் செல்லவுள்ளது.

சவூதி அரேபியாவில் பயிற்சி பெறுவதற்காக சென்ற இலங்கை குழாத்தில் இடம்பெற்ற 26 வீரர்களில் ஐவர் நீக்கப்பட்டு மற்றைய 21 வீரர்கள் தேசிய குழாத்தில் இடம்பெறுகின்றனர். அத்துடன் இங்கிலாந்தில் கால்பந்தாட்டம் விளையாடிவரும் மார்வின் ஹெமில்டன், டிலொன் டி சில்வா ஆகிய இருவரும் இங்கிலாந்திலிருந்து நேரடியாக மாலைதீவுகள் சென்று இலங்கை குழாத்துடன் இணையவுள்ளனர்.

சவூதி அரேபியா சென்ற குழாத்தில் இடம்பெற்ற கோல்காப்பாளர்களான தனுஷ்க ராஜபக்ஷ, நுவன் கிம்ஹான், முன்கள வீரர்களான மொஹமத் அபீல், உபாதைக்குள்ளான டிலிப் பீரிஸ், மொஹம்மத் ஹஸ்மீர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

மாலைதீவுகள் செல்லும் இலங்கை கால்பந்தாட்டக் குழாத்தில் சுஜான் பெரேரா (அணித் தலைவர் - அப்கன்ட்றி லயன்ஸ்), ருவன் அருணசிறி (புளூ ஈக்ள்ஸ்), கவீஷ் லக்ப்ரிய பெர்னாண்டோ (புளூ ஸ்டார்), ஹர்ஷ பெர்னாண்டோ (புளூ ஈக்ள்ஸ்), ரொஷான் அப்புஹாமி (டிபெண்டர்ஸ்), சமோத் டில்ஷான் (கலம்போ எவ்சி), சரித்த ரத்நாயக்க (கலம்போ எவ்சி), டக்ஸ்சன் பியூஸ்லஸ் (நியூ யங்ஸ்), மார்வின் ஹெமில்டன் (பேர்ஜெஸ் ஹில் டவுன் எவ்சி - இங்கிலாந்து), சலன சமீர (கலம்போ எவ்சி), ஜூட் சுபன் (றினோன்), மொஹமத் முஷ்தாக் (அப்கன்ட்றி லயன்ஸ்), மொஹமத் பஸால் (புளூ ஸ்டார்), மொஹமத் ஷிபான் (அப்கன்ட்றி லயன்ஸ்), கவிந்து இஷான் (அப்கன்ட்றி லயன்ஸ்), டிலொன் டி சில்வா (குவீன்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் - இங்கிலாந்து), வசீம் ராஸீக் (அப்கன்ட்றி லயன்ஸ்), மொஹமத் ஆக்கிப் (கலம்போ எவ்சி), அசிக்கூர் ர{ஹமான் (டிபெண்டர்ஸ் எவ்சி), சுப்புன் தனஞ்சய (ரெட் ஸ்டார்ஸ்), ரிப்கான் மொஹமத் (டிபெண்டர்ஸ்), அமான் பைஸர் (றினோன்), எடிசன் பிகராடோ (பெலிக்கன்ஸ்) ஆகிய 23 வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

அமிர் அலர்ஜி (தலைமைப் பயிற்றுநர்), மொஹம்மத் ஹசன் றூமி (உதவிப் பயிற்றுநர் - தொழில்நுட்பம்), இராஜமணி தேவசகாயம் (உதவிப் பயிற்றுநர்), ஆசிப் அன்சார் (அணி முகாமையாளர்).

பங்களாதேஷ், இந்தியா, வரவேற்பு நாடான மாலைதீவுகள், நேபாளம், இலங்கை ஆகிய ஐந்து நாடுகள் பங்குபற்றும் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பயின்ஷிப் போட்டி எதிர்வரும் அக்டோபர் 1ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 1ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியில் பங்களாதேஷை இலங்கை எதிர்த்தாடும்.

அதனைத் தொடர்ந்து ஆரம்ப விழா வைபவம் உத்தியோகபூர்வமாக நடத்தப்படும். அதன் பின்னர் மாலைதீவுகளுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான போட்டி நடைபெறும்.

இலங்கை தனது 2ஆவது போட்டியில் நேபாளத்தை அக்டோபர் 4ஆம் திகதியும் 3ஆவது போட்டியில் இந்தியாவை 7ஆம் திகதியும் கடைசிப் போட்டியில் மாலைதீவுகளை 10ஆம் திகதியும் எதிர்த்தாடும்.

லீக் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அக்டோபர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடும்.