(க.கமலநாதன்)

நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்பானது நாட்டை பிளவு படுத்தும் பிரிவினைவாத அங்கங்கள், சமஷ்டி ஆட்சி முறைமை என்பவற்றை உள்ளடக்கியதாகவே அமையும். எனவே நல்லாட்சி அரசாங்கத்தினால் இழைக்கப்படவுள்ள இந்த தவறானது இனி ஒருபோதும் திருத்தப்பட முடியாத ஒன்றென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் பலவும் தவறானதாகவே அமைந்துள்ளது. அவற்றில் திருத்திக்கொள்ள கூடிய அம்சங்கள் உள்ளன. அதேபோன்று இனி ஒரு போதும் திருத்திக்கொள்ள முடியாத பாரதூரமான அம்சங்களும் உள்ளன. அதன் பிரகாரம்  அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்பானது நாட்டை பிளவுபடுத்தும் பிரிவினைவாத அங்கங்கள், சமஷ்டி ஆட்சி முறையை உள்ளடக்கியதாக உள்ளது.

அவற்றை மீண்டும் நீக்கம் செய்வது மிகக்கடினம். இது சர்வதேச சக்திகளின் வேண்டுகோளுக்கு இணங்க கொண்டுவரப்படும் அரசியலமைப்பு என்பதை அறிந்துக்கொள்ளவதற்கு அச்சிடப்பட்ட ஆவணங்கள் எமக்கு அவசியமில்லை. தற்போதைய ஆட்சியாளர்களின் கடந்த கால செயற்பாடுகளின் ஊடாக அதனை அறிந்துக் கொள்ள முடியும். அதனால் நாடு எதிர்கொள்ள போகும் அபாயாத்தை முன்கூட்டியே சொல்ல வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

அன்று நாங்கள் உயர்தரம் கற்கும் மாணவர்களாக இருந்த போது 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. அந்த தருணத்தில் எமது நாட்டவருக்கு நேரப்போகும் அபாயத்தினை எம்மால் உணர முடிந்தது. அதனால் நாம் மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து தேசத்திற்கு ஏற்படவிருந்த அச்சுறுத்தலுக்கு எதிராக போராட்டினோம். அதனால் இன்றும் அது போன்றதொரு ஆபத்து நேரப்போதாக உணர்கின்றோம்.

எவ்வாறாயினும் நாம் கூட்டு எதிரணியின் உறுப்பினர்களை அரசிலமைப்பு புத்துருவாக்க செயற்பாடுகளில் ஈடுபடுத்தி அவர்கள் வாயிலாக நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்பார்த்திருந்தோம். அவ்வாறு நாம் செய்திருந்தால் புதிய அரசியலமைப்பு என்ற பூந்தட்டில் நாமும் கைவைத்தாற் போலாகியிருக்கும்.

அதனால் கடந்த நாட்களில் நாம் இந்த விடயத்தில் தலையீடு செய்வது தொடர்பில் கட்சியாக எந்தவித தீர்மானங்களையும் மேற்கொண்டிருக்கவில்லை. எனினும் தற்போது கூட்டு எதிரணியின் உயர்மட்ட தலைவர்கள் சந்திப்பின் போது வேறுபட்ட தீர்மானங்களை எடுப்பதற்கான சாத்தியமுள்ளது என்றார்.