(ரொபட் அன்டனி) 

புதிய அரசியலமைப்பிற்கான வரைபை  தயாரித்து வருகின்ற  அரசியலமைப்பு நிர்ணய சபையின்  பிரதான   வழிநடத்தும் குழுவின்  தலைவர் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க,  அந்தக் குழுவிற்கு வழங்கும் தலைமைத்துவம் தொடர்பில்   பல்வேறு தரப்பினரதும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். 

குறிப்பாக   இந்தப் பிரதான வழிநடத்தல் குழுவில்   21 பாராளுமன்ற உறுப்பினர்கள்  இடம்பெறுகின்றனர்.  அந்த 21 எம்.பி.க்களில்  அதிகமானோர்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதிய  அரசியலமைப்பு குறித்த அர்ப்பணிப்பான செயற்பாடு தொடர்பில்  பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர்.  

அதாவது  புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் விடயத்திலும், பிரதான வழிநடத்தல் குழுவின் கீழ்   காணப்படுகின்ற  இனப்பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பிலும்   பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக   பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டுகின்றனர். 

இது தொடர்பில்  பிரதான வழிநடத்தல் குழுவில் இடம்பெறும் சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  ஒருவர் கேசரிக்கு தகவல் தருகையில்;  

புதிய அரசியலமைப்பை  உருவாக்கும்  செயற்பாட்டில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பு தொடர்பில்  நாங்கள் ஆச்சரியமடைகிறோம்.  நிறைவேற்று  அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மாற்றம், தேர்தல் முறைமை மாற்றம்,  இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் போன்றவை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.  அவர்   இந்த அரசியலமைப்பு விடயத்தில்  காட்டும்  அர்ப்பணிப்பும் ஆர்வமும்    தேசிய அரசாங்கத்தில்   காட்டுவாராயின் மிகவும் சிறப்பாக  இருக்கும் என்றார். 

அரசியலமைப்பு நிர்ணய சபையின் கீழ்  செயற்படுகின்ற இந்த பிரதான வழிநடத்தல் குழுவே  புதிய அரசியலமைப்பின் வரைபை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளமை   குறிப்பிடத்தக்கதாகும்.