(க.கமலநாதன்)

முன்னைய மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் முறையான நிதி முகாமைத்துவம் இருக்கவில்லை. அதற்கு நிகரானதாகவே நல்லாட்சி அரசங்கத்தின் செயற்பாடுகளும் அமைந்துள்ளன.

எனவே அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள "வற்" வரி சட்ட மூலத்தை கடுமையாக எதிர்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப்பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று (16)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டை கடன் குகைக்குள் தள்ளிவிட்டது போன்று இந்த அரசாங்கமும் கடன் சுமையை அதிகமாக்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்ற நல்லாட்சி அரசாங்கம் “வற்” வரி விதித்து அதனூடாக அரச வருமானத்தினை அதிகரிக்கச் செய்வதாக வாக்களித்துள்ளது. அதற்கமையவே “வற்” வரி விதிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும்  இவர்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் பாரிய வியாபார ஸ்பானங்களுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிப்புச் செய்து மக்களிடத்தில் அறவிடப்படும் வரிவிதிப்பை குறைப்பதாக வாக்களித்திருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்தப்பின்னர் முன்னுக்கு பின் முறனான செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றனர். 

மேலும்  35 வீதமாக இருந்த பாரிய வியாபார நிறுவனங்களுக்கான வரியை 17 வீதமாக குறைத்துவிட்டு மக்களிடத்திலிருந்து அறவிடப்படும் வரியை 4 வீத்தினால் அதிகரித்து “வற்” வரி விதிக்கப்படும் பரப்பினையும் விஸ்தரிப்பு செய்தது அதுவே நீதிமன்ற தடை உத்தரவுக்கும் பிரதான காரணமாக அமைந்தது.