- அம்பாந்தோட்டையில் சைனோபாம் தடுப்பூசி தொழிற்சாலை
- பாடசாலைகளுக்கு டிஜிட்டல் வகுப்பறைகள்
- கொழும்பில் தொடர்மாடி கட்டிடங்கள்
- நவீன ஹைடெக் விவசாய பல்கலைக்கழகம்
- கொழும்பு துறைமுக நகரில் 530 மில்லியன் திட்டம்
ரொபட் அன்டனி
சீனா இலங்கையில் இரண்டு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியான முதலீடுகளை விரைவில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றது. இதுதொடர்பாக இரண்டு தரப்பிலும் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. விரைவில் இந்த வேலைத்திட்டங்கள் செயல்வடிவம் பெறும் என்று சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகரில் 530 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டு திட்டம், அம்பாந்தோட்டையில் சைனோபார்ம் தடுப்பூசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, பாதுகாப்பு கண்ணாடித் தொழிற்சாலை போன்றவற்றை நிறுவுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
மேலும் இலங்கையின் பாடசாலைகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் என்ற டிஜிட்டல் வகுப்பறை திட்டத்தை முன்னெடுப்பதற்கும் சீனா முதலீடு செய்யவுள்ளது. அதேபோன்று நவீன தொழில்நுட்ப விவசாய பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கும் நாரஹேன்பிட்டியில் ஒரு தொடர் மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் சீனா முதலீடு செய்யவுள்ளது என்றும் பாலித கோஹண சுட்டிக்காட்டினார்.
விரைவில் இலங்கையில் சீனா மேற்கொள்ளவுள்ள முதலீடுகள் தொடர்பாக பீஜிங்கில் இருந்தவாறு வீரகேசரிக்கு விபரிக்கையிலேயே இந்த விடயங்களை கோஹன குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்
நான் சீனாவுக்கு தூதுவராக வந்ததன் பின்னர் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றேன். குறிப்பாக சீனாவில் இருந்து அதிக முதலீடுகளை மேற்கொள்வதே எனது நோக்கமாக காணப்படுகின்றது. தூதுவராக சென்ற பின்னர் இதுவரை 26 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி விரைவில் இலங்கைக்கு இரண்டு மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை சீன நிறுவனங்கள் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்றன.
கொழும்பு துறைமுக நகரத்தில் 530 மில்லியன் டொலர் தொடர்பான ஒரு முதலீடு செய்வதற்கு சைனா ஹார்பர் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. அதேபோன்று அம்பாந்தோட்டை முதலீட்டு வலையத்தில் இரண்டு முதலீட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதாவது சைனோபாம் தடுப்பூசி தொழிற்சாலை ஒன்றையும் பாதுகாப்பு கண்ணாடித் தொழிற்சாலை ஒன்றையும் அம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தில் மேற்கொள்வதற்கு சீனா இணங்கியிருக்கிறது. அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவேறி இருக்கின்றன. அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
மேலும் இலங்கையின் பாடசாலைகளில் தற்போது இருக்கின்ற வகுப்பறைகளுக்கு பதிலாக டிஜிட்டல் வகுப்பறைகளை ( ஸ்மார்ட் க்லலாஸ் ரூம்) பெற்றுக்கொடுப்பதற்கு சீனா உதவ இருக்கின்றது. இதனையும் சீனா ஒரு முதலீடாகவே செய்யவுள்ளது. இவை கடன் அல்ல என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அந்த வகையில் இந்த ஸ்மார்ட் கிளாஸ் ரூம் எனப்படும் டிஜிட்டல் வகுப்பறைகளை பாடசாலைகளை நிறுவ நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கான நிதி எவ்வாறு முன்னெடுக்கப்படவேண்டும் என்பது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விரைவில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் என்பதுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும்.
அதேபோன்று இலங்கையில் மிகப் பாரிய அளவிலான நவீன தொழில்நுட்ப விவசாய பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு சீனா முதலீடு செய்யவிருக்கின்றது. இது குறித்த பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை மிக முக்கியமானதாக காணப்படுகின்றன. அதேபோன்று சம்மிட் பிளட் அமைந்திருக்கின்ற பகுதியில் ஒரு தொடர் மாடிக் கட்டிடத்தை அமைப்பதற்கான முதலீட்டை சீனா மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இவையாவும் முதலீடுகளே தவிர கடனுதவிகள் அல்ல என்பதை சகலரும் உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இலங்கையில் சைனோபாம் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பட்சத்தில் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்ய முடியும். இதன் ஊடாக இலங்கை டொலர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.
அதேபோன்று இலங்கைக்கு இந்த முதலீட்டுத் திட்டங்களுடன் கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமான அந்நிய செலாவணி இலங்கைக்கு வரும் நிலைமை காணப்படுகின்றது. அவை எமது அந்நிய செலாவணி பிரச்சினைக்கு மிகப்பெரிய ஒரு தீர்வாக அமையும். தற்போது இலங்கை பாரிய டொலர் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது.
எனவே என்னைப் பொறுத்தவரையில் நான் அதிகளவான முதலீட்டு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றேன். கடன் பெறுவதை விட முதலீட்டு திட்டங்களை நாம் பெற முயற்சிக்க வேண்டும். அதன் ஊடாக தொடர்ந்தும் இலங்கைக்கு நன்மை கிடைக்கும்.
அதேபோன்று இலங்கைக்கு அன்னிய செலவாணி வருமானமும் அதிகரிக்கும். இந்த முதலீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. பல கலந்துரையாடல்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன. எனவே விரைவில் இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்ததும் இந்த திட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM