(ஆர்.யசி)  

கெரவலபிட்டிய யுகதணவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு கொடுப்பதன் மூலமாக தேசிய வளங்களை தனியார் மயப்படுத்தும் அரசாங்கத்தின் தன்னிச்சையான தீர்மானத்திற்கு தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள் தெரிவிப்பதுடன், தமது எதிர்ப்பை கடிதம் மூலமாக ஜனாதிபதியிடத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். 

அடுத்த வாரம் ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கவுள்ள ஆளுந்தரப்பின் பங்காளி கட்சிகள்  | Virakesari.lk

மக்களுக்கும், தமக்கும் கொடுத்த வாக்குறுதிகளை மீறும் விதத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்கள் அமைந்துள்ளதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

கெரவலபிட்டிய யுகதணவி மின் உற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் குறித்து ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் இறுதியாக பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதும் பங்காளிக்கட்சிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முயற்சிக்கும் பங்காளிக்கட்சிகள் அது குறித்து கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இது குறித்து கூறுகையில். 

கெரவலபிட்டிய யுகதணவி மின் உற்பத்தி நிலையத்தை தனியார் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னைய ஆட்சியாளர்கள் நாட்டை தனியார் மயப்படுத்தும் நோக்கத்தில் எடுத்த தீர்மானங்களை கண்டித்தும், தேசிய வளங்களை பாதுகாப்போம் என்ற வாக்குறுதியை மக்களுக்கு கொடுத்ததன் மூலமுமே புதிய அரசாங்கமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் உருவானது. நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக இந்த அரசாங்கத்தை பலப்படுத்தும் நோக்கத்தில் ஒன்றிணையவும் அவர்கள் எமக்கு கொடுத்த வாக்குறுதிகளே காரணமாகும். 

அவ்வாறான நிலையில் தற்போது அரசாங்கம் வாக்குறுதிகளை மீறிய வகையில் தீர்மானங்களை எடுப்பதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. யுகதணவி மின் உற்பத்தி நிலையமானது இலங்கையின் தேசிய சொத்தாகும். இதனை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு நாற்பது வீத பங்குகள் அடிப்படையில் கொடுப்பதன் மூலமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் நிலை உருவாகும். எனவே தேசிய வளங்களை விற்பதை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தும். அரசாங்கத்தில் இருக்கும் பிரதான எதிர்கட்சியாக நாம் இதனை எதிர்ப்போம் என்றார்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இது குறித்து கூறுகையில் :- 

கெரவலபிட்டிய யுகதணவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கையை எம்மால்  ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எவரும் அரசாங்கத்தில் இருந்துகொண்டு தனித்து தீர்மானம் எடுக்க முடியும் என்றால் ஆட்சியை உருவாக்க நாம் பாடுபட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேசிய வளங்களை பாதுகாக்க வேண்டும், ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே நாம் செயற்பட்டு வருகின்றோம். 

ஆகவே ஆளுந்தரப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளாக நாம் பத்து கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் உள்ளோம். இந்த வேலைத்திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளோம். அதேபோல் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம், இந்த வாரத்தில் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.  நாளை (இன்று) அமைச்சரவையிலும் இந்த காரணிகள் தொடர்பில் கலந்துரையாடுவோம் என்றார்.

ஸ்ரீலங்கா கொமியுனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும் எம்.பியுமான திஸ்ஸ விதாரண இது குறித்து கூறுகையில், 

தேசிய வளங்களை விற்கும் எந்தவொரு செயற்பாடும் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். அதுவும் நாட்டின் மின் உற்பத்தியில் முக்கிய பங்களிப்பை செலுத்தும் வளங்களை சர்வதேச நிறுவனங்களிடம் கொடுத்தால் எதிர்காலத்தில் நாட்டின் பெருளாதாரம் மட்டுமல்லாது தேசிய பாதுகாப்பு விடயங்களிலும் இது நெருக்கடியை உருவாக்கலாம். 

கெரவலபிட்டிய யுகதணவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு ஒப்பந்தம் மூலமாக வழங்குவது குறித்தும் அரசாங்க பங்காளிக்கட்சியாக எம்மத்தியில் இணக்கப்பாடு இல்லை. இவ்வாறான தீர்மானங்களை எம்மால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஜனாதிபதியிடம் இந்த நிலைமைகளை எடுத்துக்கூறுவோம். இப்போதும் எமது கண்டனத்தை எழுத்து மூலம் வழங்கியுள்ளோம். அவர் ஒருவரால் மட்டுமே இந்த ஒப்பந்தத்தை நிறுத்த முடியும் என்றார்.