(பா.ருத்ரகுமார்)

தொற்றா நோயைக் கட்டுப்படுத்துவதற்காக உலக வங்கியினால் ஏற்கனவே இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதனை 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் வரையில் அதிகரிப்பதற்கு உலக வங்கி அதிகாரிகளிடையே இணக்கம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது  தொற்றா நோயைக் கட்டுப்படுத்துவதற்காக  உலக வங்கியினால் மேலதிகமான நிதியை வழங்க இணங்கியுள்ளது.

இதன்படி கடந்த 5 வருடங்களில் தொற்றா நோயைக் கட்டுபடுத்த உலக வங்கியானது இதுவரை 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இலங்கைக்கு வழங்கியுள்ளது. குறித்த நிதியினையே 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க இணக்கப்பாடு எட்டுப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் ஏற்படும் இறப்புக்களில் 70 சதவீதமான இறப்புக்கள் தொற்றாநோய்கள் மூலமாகவே சம்பவிக்கின்றன. எனவே அடுத்தகட்ட சுகாதார செயற்பாடுகளில் தொற்றா நோய்களை அழிக்க அதிகளவளான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

பாடசாலைகளில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு மற்றும் சேர்மானம் தொடர்பில் கணக்கிடுவதற்கு விசேட செயற்றிட்டத்தை அமுல்படுத்தவுள்ளோம். நாடுமுழுவதும் வாழ்க்கை பயிற்சி நிலையங்களை நிறுவி தொற்றா நோயற்ற நாடாகவும் மாற்ற அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

புகைத்தல் மூலமாக ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த சிகரட் பைக்கற்றுக்களில் 20 சதவீத வெற்றுப்பொதியிடல் முறைமை 80 சதவீத எச்சரிக்கை விளம்பரங்கள் என்பன தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு சிகரட் உற்பத்தி பொருட்களுக்கு 72 சதவீதம் தொடக்கம் 90 சதவீதம் வரை வரி அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்தவென குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவுக்கேற்ப, வரி அளவிடுவதற்கும்  திட்டமிட்டுள்ளது பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் வரி அறவீட்டு முறையை, இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதன் ஊடாக, தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டள்ளது.

இதன்படி உலக வங்கி வழங்கிய நிதியினை இலங்கை மிகவும் காத்திரமான வகையில் தொற்றாநோய்களை கட்டுப்படுத்த பயன்படுத்திக்கொண்டுள்ளதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் மகிழ்ச்சியுடன் குறித்த கலந்துரையாடலின் போது தெரிவித்ததாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.