ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையின் பல்வேறு பகுதியில் இஸ்ரேலிய படையினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் நான்கு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

Residents at the scene where three Palestinians were killed by Israeli forces during a raid, in Beit Anan in the Israeli-occupied West Bank, September 26, 2021. REUTERS/Mohamad Torokman

இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஹாமஸ் உறுப்பினர்களை கைதுசெய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே குறைந்தது நான்கு பாலஸ்தீன ஆயுததாரிகள் உயிரிழந்தனர் என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஜெருசலேமின் வடமேற்கில் உள்ள பிதுவின் மேற்குக் கரை கிராமத்தில் அஹ்மட் ஜஹ்ரான், மஹ்மூத் ஹமாய்தான் மற்றும் ஜகாரியா பத்வான் ஆகிய மூவர் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மொஹமட் அவாவ்தே உறுதிபடுத்தியுள்ளார்.

அதேசமயம் பாலஸ்தீனிய நகரமான ஜெனின் அருகே உள்ள புர்கின் கிராமத்தில் மற்றொரு பலஸ்தீனரும் இஸ்ரேலிய இராணுவத்தினரின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.

இஸ்ரேலின் முக்கிய வானொலி நிலையங்கள் மற்றும் செய்தி வலைத்தளங்களின் அறிக்கைகள், ஹமாஸ் உறுப்பினர்களைக் கைதுசெய்யும் நோக்கில் மேற்குக் கரையில் பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் குறைந்தது நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று கூறியது.

இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் நஃப்தாலி பென்னட் ஒரு அறிக்கையில், உடனடி பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தவிருந்த ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக படையினர் இந்த விசேட நடவடிக்கையினை எடுத்ததாக கூறினார்.

எனினும் அவர் உயிர்சேதம் தொடர்பான எந்த தகவலையும் குறிப்பிடவில்லை.

பாலஸ்தீனின் மேற்குக் கரையோர நகரங்கள் மற்றும் கிராமங்களில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் தினசரி யதார்த்தமாக இருந்தாலும், கடந்த சில மாதங்களாக, ஜெனின் பகுதியில் இராணுவத் தாக்குதல்கள் பாலஸ்தீன மக்கள் பெரிதும் அச்சமான சூழ்நிலையினை எதிர்கொண்டுள்ளனர்.