புத்தளம், இஹலபுளியங்குளம் மிகஸ்வெவ பகுதியில் உள்ள கைவிடப்பட்ட விவசாயக் கிணற்றில் தவறி வீழ்ந்த யானை ஒன்று நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் யானையின் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ள மின்சார வேலியை பராமரிக்கும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமை நிமித்தம் அந்த பிரதேசத்திற்கு சென்றபோது, யானை ஒன்று கிணற்றுக்குள் வீழ்ந்து கிடப்பதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் பற்றி கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் பிரதேச மக்கள் மற்றும் ஜே.சி.பி இயந்திரம் என்பனவற்றின் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் குறித்த யானையை பாதுகாப்பாக கிணற்றிலிருந்து வெளியே எடுத்தனர்.

மீட்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக நிகவெரட்டிய வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து வைத்தியர் ஒருவர் அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.