எனது விஜயங்கள் அனைத்தும் இலங்கை – இந்திய நட்புறவு சார்ந்தவையே! தென்னிந்தியாவிற்கான இலங்கை துணை உயர் ஸ்தானிகர் கலாநிதி. துரைசாமி வெங்கடேஸ்வரன்

By Digital Desk 2

26 Sep, 2021 | 12:03 PM
image

வீரகேசரி வாரவெளியீட்டில், கடந்த வாரம்,  தென்னிந்தியாவிற்கான இலங்கை துணை உயர் ஸ்தானிகர் கலாநிதி. துரைசாமி வெங்கடேஸ்வரன் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. 

வட இந்திய ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வெளியாகியிருந்த ஆசிரியர் தலையங்கத்தை மையப்படுத்தி, கலாநிதி. துரைசாமி வெங்கடேஸ்வரன் பற்றிய எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கும் வகையில் அக்கட்டுரை அமைந்திருந்தது. 

இதன் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளும் வகையில், கலாநிதி. டி. வெங்கடேஸ்வரனுடன்  சென்னை, நுங்கம்பாக்கத்தில் அமைந்திருக்கின்ற அவரது உத்தியோகபூர்வ அலுவலகமான தென்னிந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் சந்தித்தோம்.

கலாநிதி. துரைசாமி வெங்கடேஸ்வரன் இலங்கையின் வர்த்தகத் துறையில் பல்லாண்டு கால அனுபவம் பெற்றவர். இலங்கையின் பல்வேறு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் தலைவர் பதவி உட்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அண்மையில் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நம்பிக்கையைப் பெற்றவர்.

 நிர்வாகத் திறமையும், ஆளுமையும் பெற்ற இவரின் அனுபவத்தை நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இவரை, தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர் ஸ்தானிகராக கடந்த ஏப்ரல் மாதம் நியமித்தார்.

கேள்வி: இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் என்ற மிக முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?

பதில்: என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை எனக்குத் தந்த ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வர்த்தகப் பின்புலத்தைச் சேர்ந்தவன் என்றாலும் அரச நிறுவனங்களிலும் உண்மையான ஆர்வத்துடன் எனது பணிகளைச் செய்து வந்திருக்கிறேன். அதன் விளைவாகத்தான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் என்ற முக்கிய பொறுப்பு எனக்குக் கிடைத்தது. அதையும் பொறுப்புடன் செய்தேன். எனது பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் திருப்தி அளித்ததனால் தான் இந்தப் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று நம்புகிறேன். இந்தப் பொறுப்பில் இருந்தபடி, இலங்கைக்கும், தென்னிந்தியாவிற்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தவும் வர்த்தக மற்றும் கலாச்சார ரீதியான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஆத்ம திருப்தியுடன் பணியாற்றி வருகிறேன்.

நான் பொறுப்பேற்ற கடந்த ஐந்தரை மாதங்களுக்குள், தென்னிந்திய துணை உயர் ஸ்தானிகராலயத்திற்குட்பட்ட தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் ஆறு மாநிலங்களுக்கும் உத்தியோகபூர்வமாக விஜயம் செய்து, இலங்கையில் முதலீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆய்வுகளை ஆரம்பித்திருக்கிறேன். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்களைச் சந்தித்து, இலங்கையில் முதலீடு செய்வதற்குரிய சூழல் மற்றும் அதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது குறித்தும் கலந்தாலோசித்து வருகிறேன். 

இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா. வர்த்தக மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மூலமாக அந்த பந்தத்தை மேலும் நெருக்கமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். இதன் தொடர்ச்சியாக விரைவில் வர்த்தக ரீதியாக சில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கிறேன். வர்த்தக ரீதியாக மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் இலங்கை - இந்தியா இடையிலான உறவு மென்மேலும் பலம் பெறும் என்றும் எதிர்பார்க்கிறேன்.

மேலும் இங்கு உள்ள சர்வதேச தரத்திலான தொழில் நுட்பம் மற்றும் வர்த்தகம் சார்ந்த விடயங்களை இலங்கைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதும் என்னுடைய விருப்பம்.

கேள்வி: ஒரு நாட்டின் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்படுபவர், அந்நாட்டு வெளியுறவுத் துறைசார் விசேட கல்வித் தகுதி கொண்ட அரச அதிகாரியாகத்தான் இருப்பார். உங்கள் நியமனத்தில் இந்த நியதி கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் வர்த்தகப் பின்புலத்தைக் கொண்டிருக்கும் நீங்கள் இவ்விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து தங்களின் விளக்கம்?

பதில்: இந்தியாவில் இலங்கைக்கான மூன்று உயர்ஸ்தானிகராலயங்கள் இருக்கின்றன. டெல்லியில் பிரதான அலுவலகமும் சென்னை மற்றும் மும்பையில் துணை அலுவலகங்களும் அமைந்திருக்கின்றன. தற்போது இந்த மூன்று அலுவலகங்களிலும் பிரதானிகளாக அரசியலில் நல்ல அனுபவம் படைத்தவர்களே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த மூவரில் நானும் ஒருவன். தமிழன், இந்திய வம்சாவளியினன், தமிழகம் பற்றிய புரிதலும், நல்ல தொடர்புகளும் கொண்டவன் போன்ற காரணங்களால் தான் என்னை இந்தப் பதவிக்கு ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவு செய்தனர் என்று நம்புகிறேன். 

கேள்வி: இலங்கை - இந்திய நல்லுறவை மேம்படுத்த என்னென்ன செயற்றிட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?

பதில்: பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. தென்னிந்தியாவின் ஆறு மாநிலங்களுக்கும் வெவ்வேறு முகங்கள், வெவ்வேறு சிறப்பியல்புகள் இருக்கின்றன. அவற்றை இலங்கைக்கு எடுத்துச்சென்று அவற்றின் மூலம் அங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் வாயிலாக நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.

தென்னிந்திய வர்த்தகக் குழுமங்கள் இலங்கையில் காலூன்ற வேண்டும். இதன்மூலம் இலங்கை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் கிடைக்கும். இந்தியத் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் விஞ்ஞான வளர்ச்சி இலங்கையையும் ஈர்த்துக்கொள்ளும். இவற்றின் ஒருங்கிணைப்பால் இலங்கை – தென்னிந்திய மக்களுக்கிடையே புரிந்துணர்வும் நல்லுறவும் மேம்படும். இதை அடிப்படையாகக் கொண்டே எனது பணிகள் அத்தனையும் அமைந்திருக்கின்றன.

ஆன்மீக ரீதியாக இலங்கை-இந்தியாவுக்கிடையில் பலமான தொடர்பு இருக்கிறது. மதுரை மீனாட்சியையும், சிதம்பரம் நடராஜரையும் திருப்பதி ஏழுமலையானையும் வேளாங்கண்ணியையும் நாகூர் தர்காவையும் இன்னும் பல்வேறு திருத்தலங்களையும் தரிசிக்க வேண்டும் என்பது இலங்கை மக்களின் விருப்பமாக இருக்கிறது. இராமாயணத்தின் நீட்சி இலங்கை வரையும் பரந்திருக்கிறது. முருகனின் பிரசித்தி பெற்ற கதிர்காமம், நல்லூர் போன்ற தலங்கள் இலங்கையில் அமைந்துள்ளன. இத்தலங்களை தரிசிக்க தமிழக மக்கள் இலங்கைக்கு யாத்திரை செய்யவும் விரும்புகிறார்கள். இவ்வாறு, பரஸ்பரம் இரு நாட்டு மக்களினது ஆன்மீக யாத்திரைகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதும் எனது திட்டங்களுள் ஒன்றுதான்.

தென்னிந்திய மாநிலங்களின் அரச மற்றும் அரசு சாராத நிறுவனங்களுக்கு விஜயம் செய்து அவர்களது வர்த்தகத்தை இலங்கை வரை விஸ்தரிப்பதற்குத் தேவையான அத்தியாவசியப் பணிகளைச் செய்துகொடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.

தென்னிந்தியர்களும் இலங்கை நாட்டினருக்கும் நேரம், நிறம், உணவுப் பழக்கம், கலாச்சாரம் என்று பல்வேறு விடயங்களில் நெருங்கிய ஒற்றுமை இருக்கிறது என்பதால், பரஸ்பரம் இரு நாட்டு மக்களுக்கிடையேயும் வர்த்தக மற்றும் கலாச்சார ரீதியிலான உறவை மேம்படுத்த வேண்டும் என்பதும் என்னுடைய எண்ணம்.

சுருக்கமாகச் சொன்னால், அரசியல், வர்த்தக, கலாசார, கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த பணிகளையும் கொள்கைகளையும் செயற்படுத்துவதும் மேம்படுத்துவதும் எங்களது நோக்கம்.

கேள்வி: இலங்கை - சீன நெருக்கம் இந்தியாவுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறதாகத் தெரிகிறது. இது பற்றிய உங்கள் கருத்து என்ன? 

பதில்: இந்திய – சீன உறவு சுமுகமாக இல்லாதது தான் இப்படியொரு தோற்றம் உருவாகக் காரணம். இலங்கையைப் பொறுத்தவரை, திறந்தவெளி பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் ஒரு நாடு. சீனா போன்றே ஜப்பான், சிங்கப்பூர், கொரியா போன்ற பல நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இலங்கையில் இந்தியர்களின் வர்த்தக நிலையங்களும் சிறப்பாகவே இயங்குகின்றன.

நான் சந்தித்த சில மாநிலங்களின் முதல்வர்களும், ஆளுநர்களும் சீனா பற்றிய இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தக் கேட்டார்கள். சீனாவைப் போன்றே இந்திய முதலீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களையும் இலங்கை வரவேற்பதையும் அதற்குத் தேவையான உதவிகளைச் செய்து தரவே என் போன்ற அதிகாரிகளை இலங்கை அரசு நியமித்திருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கையில் முதலீடு செய்து வர்த்தகத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். 

இவ்விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திறந்த மனதுடன், பரந்த மனப்பான்மையுடன், வெளிப்படைத் தன்மையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். எங்களுடைய வேண்டுகோளை ஏற்று இந்தியாவிலிருந்து இரண்டு மாநில முதல்வர்கள் இலங்கைக்கு வருகை தர சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

கேள்வி: அண்மையில் வட இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று உங்களின் காரைக்கால் பயணம் குறித்து எதிர்மறையான விமர்சனத்தை முன் வைத்தது குறித்து?

பதில்: நான்கு மாநிலங்களுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்த பிறகு, புதுச்சேரி யூனியன் அரசு விடுத்த அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தேன். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரைச் சந்தித்தேன். காரைக்கால் - தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பற்றி அவர்களுடன் கலந்துரையாடினேன். இது தொடர்பான பல கட்டப் பேச்சுவார்த்தைகள் கடந்த காலங்களில், டெல்லியில் நடைபெற்றன.

தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான பயணியர் கப்பல் போக்குவரத்து ஏற்கனவே இரண்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு, அது வெற்றி பெறாததால் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதனால், அதைத் தொடர்வதற்கான முயற்சியின் ஒரு கட்டமாக காரைக்கால் சென்று துறைமுகத்தைப் பார்வையிட்டேன். அது பற்றி புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜனுடனும் கலந்தாலோசித்திருக்கிறேன். அங்கு சென்று சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதி, வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. 

தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் இலங்கையர்கள் தாயகம் திரும்புவதற்கு கப்பல் வழியிலான பயணத்தை விரும்புகிறார்கள். சரக்கு போக்குவரத்திற்கும் இது முக்கியமானதாக இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கும் இது ஒருவித சாகசப் பயணமாக அமையும் என்பதாலும், இது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். 

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் இயங்கி வரும் வைத்தியசாலையில் இலங்கையர்கள் பலர் சத்திரசிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள். எனது கேரள விஜயத்தின்போது அவர்களைச் சந்தித்து நோயாளிகளுக்கு ஆறுதல் கூறினேன். மேலும் பல நிறுவனங்கள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகங்கள் என பல அமைப்புகளுடன் இணையவழியில் கலந்துரையாடலை மேற்கொண்டிருக்கிறேன். அவர்களும் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாக தங்களுடைய விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்கள். 

இவையனைத்தும் இலங்கை – இந்திய உறவு வலுப்படுத்தச் செய்வதற்காக எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகளே என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

கேள்வி: சில இந்திய மற்றும் தமிழக ஊடகங்கள் நீங்கள் இந்தியாவை உளவு பார்ப்பதற்காக சீனாவின் சார்பில் இலங்கையால் அமர்த்தப்பட்டவர் என்கின்றனவே?

பதில்: இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான், இந்தியாவை உளவு பார்க்கிறேன் என்பது முற்றிலும் தவறான ஒரு கருத்து. எனது கல்வித் தகுதி, தமிழகத்துடனான தொடர்புகள், இலங்கை மக்கள் நலன் மீதான எனது அக்கறை என்பவற்றால்தான் எனக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, இலங்கை - இந்திய உறவை மேம்படுத்துவதற்கான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். என் மீதான தவறான இந்தக் கருத்து ஆதாரமற்றது.

பரபரப்புக்காக ஒரு கட்டுரை எழுதப்பட்டாலும் அது பற்றிய அடிப்படை ஆதாரங்கள் இருக்க வேண்டும். வெறும் ஊகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது என்றே எண்ணுகிறேன். அந்தக் கட்டுரையாளர் இது பற்றி என்னிடம் கேட்டிருந்தால் விளக்கமளித்திருப்பேன். சரியான தகவலைப் பகிர்ந்து கொண்டிருப்பேன். யாரோ ஒருவரின் தூண்டுதலின் பெயரில்தான் இத்தகைய கட்டுரைகள் வெளியாகின்றன என்றும் சந்தேகிக்கிறேன்.

நாளடைவில் இலங்கை - இந்திய உறவு வலுப்பெறும்போது நான் நியமிக்கப்பட்டிருப்பதற்கான உண்மையான அர்த்தம் மக்களுக்கு விளங்கும். 

கேள்வி: திருச்சியில் இயங்கி வரும் பெருநிறுவனமான கோத்தாரி நிறுவனத்துக்கு விஜயம் செய்த பின்னணி என்ன? 

பதில்: ஒன்றரை மாதங்களுக்கு முன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இயற்கையான முறையில் உரங்களைத் தயாரிப்பதற்கான அவசியம் குறித்துப் பேசியிருந்தார். இதற்காக பிரத்தியேக செயற்றிட்டம் ஒன்றையும் அறிவித்திருந்தார். இது தொடர்பான வர்த்தமானியையும் அவர் வெளியிட்டிருந்தார். 

அவரது செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயத்தான் தென்னிந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமான கோத்தாரி உரத் தயாரிப்பு தொழிற்சாலையைப் பார்வையிடச் சென்றிருந்தேன். 

இது போன்ற எதிர்மறைக் கட்டுரைகளால், இலங்கை - இந்தியா இடையிலான வர்த்தக மேம்பாடு தடைப்படக்கூடும். அதனால் ஊடகங்கள் தங்களின் பொறுப்பினை உணர்ந்து, வர்த்தக உறவிற்கு ஊக்கமளித்து, இலங்கை மற்றும் இந்திய மக்களின் வாழ்வாதார உயர்வுக்கு வழி வகுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி: கேரள பயணத்தின்போது சாந்திகிரி ஆசிரமத்திற்கு விஜயம் செய்தீர்களாமே?

பதில்: எனக்கு முன் இந்தப் பொறுப்பில் இருந்தவர்கள் கூட அங்கு சென்று, அங்குள்ள சுவாமிகளிடம் ஆசி பெற்றிருக்கிறார்கள். மரியாதைக்குரிய பல அரசியல் தலைவர்களும் அங்கு சென்றிருக்கிறார்கள். இந்த மடத்தின் வளாகத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் ஒன்றும் இருக்கிறது. இதன் கிளை ஒன்றை இலங்கையில் அமைப்பது தொடர்பாக, அவர்கள் வேண்டுகோள் வைத்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைக்காகவே அங்கு சென்று வந்தேன். அவர்களது சேவை இலங்கை மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் சென்றிருந்தேன். அந்த விஜயத்தின்போது, கேரள முதல்வரின் ஏற்பாட்டில், அங்கே இருக்கின்ற உலகப் புகழ்பெற்ற பத்மநாப சுவாமி ஆலயத்துக்கும் சென்று தரிசனம் செய்து வந்தேன்.

கேள்வி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கான உங்களது விஜயத்துக்குக் காரணம் என்ன?

பதில்: அது ஒரு தனியார் மின் உற்பத்தி நிறுவனம். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதி தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள மின்சாரத்தை இலங்கைக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறு பற்றி ஆராயவே அங்கு சென்றேன். இதுதொடர்பாக கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது நான் புதிதாக பொறுப்பேற்றிருப்பதால், இதுதொடர்பான தொழில்நுட்பச் சாத்தியம் குறித்து அந்த நிறுவனம் விடுத்த அழைப்பை ஏற்று, அங்கு சென்று வந்தேன். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வருகின்ற இந்தியா - இலங்கை கடலடி தொழில்நுட்ப சேவை வழித்தடம் மூலம் மின்சாரத்தை இலங்கைக்கு அனுப்ப முடியுமா என்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. வேறு தனிப்பட்ட காரணம் எதுவுமில்லை. 

கேள்வி: தமிழக அரசு சார்பில் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத் துறை என்ற ஒன்று உருவாக்கப்பட்டு அதன் அமைச்சராக மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். அவரைச் சந்தித்து தமிழகத்தில் வாழும் இலங்கையர்கள் குறித்த பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மேற்கொண்டிருக்கிறீர்களா..?

பதில்: தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கான முதல்வரின் நலத்திட்டங்களைப் பாராட்டுகிறேன், நன்றி கூறிக்கொள்கிறேன். அது பற்றி முதல்வரை நேரில் சந்தித்து நன்றிகூறவும் இருக்கிறேன். தமிழக அரசு இதுபோன்ற அமைச்சகத்தை ஏற்படுத்தி தமிழர்கள் மீது அக்கறை காட்டுவது உண்மையில் வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது. முதல்வரின் சந்திப்புக்குப் பின் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் மஸ்தானை சந்தித்து நன்றி கூறவும் எண்ணியிருக்கிறேன். 

கேள்வி: இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்த ஜனாதிபதியின் செயற்றிட்டம் தற்காலிகமானதா? நிரந்தரமானதா?

பதில்: கொரோனாத் தொற்று பாதிப்புக்கு பின்னர் உலகளாவிய ரீதியில், வர்த்தகத் துறையில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் ஒப்பீட்டளவில், இலங்கைக்கு அத்தகையதொரு பொருளாதார நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை. இந்தச் சூழலிரும் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லவே ஜனாதிபதி இந்த அவசரகாலத் திட்டத்தை அறிவித்திருக்கிறார். நாட்டை கட்டுக்கோப்பாக வழிநடத்த வேண்டும் என்பதற்காக இந்த செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மக்களுக்குத் தேவையான அளவிற்கு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் இருந்தாலும் அவை மக்களைச் சென்றடைவதில் சில தடைகள் இருக்கின்றன. இதனால் சாதாரண, ஏழை எளிய பாமர மக்களுக்கு எந்தத் தட்டுப்பாடும் இன்றி பொருட்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அவசரகால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருக்கிறார். கூடிய விரைவில் இந்த நிலை மாறும். அதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யுத்த காலகட்டத்தில் கூட இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றகரமாகவே இருந்தது. இப்போதைய நெருக்கடியான சூழலிலும் இலங்கையின் அபிவிருத்தி சர்வதேச அளவில் சீராக இருக்கிறதே தவிர குறையவில்லை. எனவே இந்த அவசரகால நிலை தற்காலிகமாக உருவானது. கூடிய விரைவில் இதுவும் மாறும்.

கேள்வி: உயர்ஸ்தானிகராக தங்களின் எதிர்கால திட்டம் குறித்து..?

பதில்: விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல விடயங்களில் தென்னிந்தியாவில் சர்வதேச தரத்திலான தொழில்நுட்பம் கிடைக்கிறது. கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தில் நடைமுறையில் இருக்கும் பல தொழில்நுட்பங்களை இலங்கையர்களுக்கு அறிமுகப்படுத்த தமிழக ஆளுநரின் அனுமதியுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருகின்றன. 

அந்தப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்து அங்குள்ள விவசாய நிபுணர்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டத்துக்கு தமிழக ஆளுநர் அனுமதி அளித்திருக்கிறார். இதுதொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் இது பற்றி கலந்தாலோசிக்க எண்ணியிருக்கிறேன். 

கேரளாவில் சிறந்து விளங்கும் தென்னை தொழில்நுட்பம் மற்றும் மீன் வளர்ப்பு தொழில்நுட்பம் என்பவற்றையும் இலங்கைக்கு விஸ்தரிக்க எண்ணியிருக்கிறேன்.

மேலும் தென்னிந்தியாவிலிருந்து முதலீட்டாளர்கள் குழு ஒன்றினை இலங்கைக்கு என்னுடைய தலைமையில் அழைத்துச் செல்வதற்கான ஒருங்கிணைப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் வர்த்தக அமைச்சின் அனுமதியும் கிடைத்துவிட்டது. விரைவில் வர்த்தகர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய முதலீட்டாளர்கள் குழு இலங்கைக்குச் சென்று முதலீடு செய்வதற்கான சூழல் குறித்து ஆராயவுள்ளது. இதுபோல் பரஸ்பரம் இரு நாடுகளும் பலன் பெறும் வகையில் சில திட்டங்கள் இருக்கின்றன. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் ஆலோசனைகள், வழிகாட்டல்களின் படி அவை செயற்படுத்தப்படும் என்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

நேர்காணல்: வாசுகி

வீரகேசரிக்கான இந்தியப் பொறுப்பாளர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டிசம்பர் என்கின்றது - உறுதியாக...

2022-09-29 15:08:23
news-image

யார் இந்த பொன்னியின் செல்வன்?

2022-09-29 15:25:42
news-image

முதல் முறையாக விண்கல்லை திசை திருப்பிய...

2022-09-29 13:18:27
news-image

உடையால் பற்றி எரியும் ஈராக் :...

2022-09-29 13:18:49
news-image

கஞ்சாவை சட்டபூர்வமாக்குவதால் யாருக்கு இலாபம் ?

2022-09-29 12:26:33
news-image

மீண்டும் களத்தில் இறங்கும் சந்­தி­ரிகா

2022-09-29 12:26:16
news-image

சிறுவர்கள் பட்டினியால் பாதிக்கப்படுவது குறித்த தகவல்...

2022-09-28 12:40:54
news-image

இலங்கையின் வர்த்தக நாமம் கஞ்சா…?

2022-09-28 10:14:28
news-image

மலையக சமூகம் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதியின்...

2022-09-28 10:10:48
news-image

அடையாளம் தான் துறப்போம். எல்லா தேசத்திலும்...

2022-09-27 09:27:02
news-image

ஐ.எம்.எப். கடனை தாண்டிய இந்தியாவின் டொலர்...

2022-09-26 10:53:34
news-image

இந்தியா இலங்கைக்கு பலமாக இருக்கின்றது :...

2022-09-25 15:44:19