ஆர்.ராம்

எங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அநுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் மற்றும் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.

இதன்போதே தமிழ் அரசியல் கைதிகள் மேற்கண்டவாறு தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த விஜயம் சம்பந்தமாக தெரிவிக்கையில்,

அநுராபுரச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டோம். அதன்போது கடந்த 12ஆம் திகதி சிறைக்குள் வந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை தெரிவித்தனர்.

குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் பத்துப்பேரையும் வரவளைத்து முழந்தாளிடச்செய்து அச்சுறுத்தல் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாக கூறினார்கள். அதன் பின்னர்  இருவரை தொடர்ந்தும் துப்பாக்கியை தலையில் வைத்து மிரட்டியதாக கூறினார்கள்.

அதன்போது இராஜாங்க அமைச்சரின் உதவியாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே அவரை பிறிதொரு இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், சிறை அதிகாரிகளும் அவ்விடத்தில் நின்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் அவர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு எம்மிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்காக தம்மை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் கோரினார்கள். அதற்குரிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவுள்ளதாக அவர்களிடத்தில் தெரிவித்துள்ளோம்.

அதேநேரம், அந்த கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதோடு அவர்களை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் வலியுறுத்துகின்றோம்.

ஏற்கனவே கொரோனா நெருக்கடிக் காலத்தில் அவர்கள் யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அவ்விதமானதொரு ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். மேலும், இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்துவதோடு அவ்வாறு நீக்கப்பட்டு அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கோருகின்றோம்.

இந்த விடயத்தினை ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் கவனத்திற்கும் கொண்டு செல்லவுள்ளோம் என்றார்.