சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐந்து ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

2021 ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சார்ஜாவில் நடைபெற்ற 37 ஆவது லீக் ஆட்டத்தில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைதராபாத் பந்து வீச்சை தேர்வுசெய்ய, பஞ்சாப் கிங்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதற்கிணங்க பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக அடன் மார்க்ரம் 27 ஓட்டங்களையும், ராகுல் 21 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

126 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணியினரால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

அணி சார்பில் அதிகபடியாக ஜோசன் ஹோல்டர் 47 ஓட்டங்களையும், விருத்திமான் சாஹா 31 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐந்து ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இதேவேளை நேற்றுமாலை  டுபாயில் நடைபெற்ற 36 ஆவது லீக் ஆட்டத்தில், ரிஷாப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 33 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

இது இவ்வாறிருக்க இன்று மாலை அபுதாபியில் ஆரம்பமாகவுள்ள 38 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

அதேசமயம் டுபாயில் ஆரம்பமாகவுள்ள 39 ஆவது லீக் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவும், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photo Credit ; IPL2021