(எம்.எப்.எம்.பஸீர்)

பலபிட்டிய நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முன்,  பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், குடிபோதையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.  காலி பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணிமனை இந்த தகவலை உறுதி செய்தது.

பலபிட்டிய நீதிவான், இல்லத்தின் முன்னால், பொலிஸ் சீருடையில் குடிபோதையில் ஒழுங்கீனமாக குறித்த  கான்ஸ்டபிள் கடமையில் ஈடுபட்டுள்ளதை அவதானித்துள்ள நீதிவான் பொலிசாருக்கு அறிவித்ததை அடுத்து, அம்பலாங்கொட பொலிசாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிவானின் வீட்டுக்கு முன்பாக மலை 6.00 மணி முதல் மறு நாள் காலை 6.00 மனணி வரையிலான காலப்பகுதிக்காக குறித்த கான்ஸ்டபிள்  நேற்று முன்தினம் 24 ஆம் திகதி கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு கடமைகளில் ஈடுபடும் குறித்த கான்ஸ்டபிள், போதையில் ஒழுங்கீனமாக  இருப்பதாக நீதிவான் அம்பலாங்கொடை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு குறித்த தினம் இரவு 10.40 மணியளவில் அறிவித்துள்ள நிலையிலேயே,  ஸ்தலத்துக்கு சென்ற பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

பின்னர், குறித்த கான்ஸ்ட்பிள் பலபிட்டிய வைத்தியசாலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, வைத்தியர்கள் அவர் போதையில் இருப்பதை உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் சந்தேக நபர் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.