(இராஜதுரை ஹஷான்)

கோதுமை மா மற்றும் இறக்குமதி செய்யப்படும் பால்மா  ஆகிய அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை மீண்டும் மீண்டும் அதிகரித்தால் நுகர்வோர் பெரும் சுமையை எதிர்கொள்ள நேரிடும்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்குவதை விடுத்து அவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவது முற்றிலும் தவறானது என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

நுகர்வோர் அதிகார சபை வியாபாரிகளின் பக்கம் இருந்து செயற்படாமல் நுகர்வோர் தரப்பில் இருந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

அவர்மேலும் குறிப்பிடுகையில்,

கோதுமை மா, இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலையை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க நிதியமைச்சு கடந்த வாரம் இணக்கம் தெரிவித்தது. பின்னர் அத்தீர்மானம் இடை நிறுத்தப்பட்டது.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அமைச்சரவை உபகுழு கூட்டத்தின்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அறிய முடிகியது.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டால் வெதுப்பக உற்பத்தி உணவு பொருட்களின் விலை அதிகரிக்க கூடும்.

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து பாண் ஒரு இறாத்தலின் விலை 5 ரூபாவினாலும், பனிஸ் உள்ளிட்ட  உணவு பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டால் அதன் சுமையை நுகர்வோர் எதிர்க் கொள்ள நேரிடும். என்றார்.