கண்டி, கல்ஹின்னை பிரதேசத்தில் அமைந்துள்ள படகொல்லாதெனிய மற்றும் பெபிலகொல்ல ஆகிய இரு பள்ளிவாயல்கள் மீது நேற்று இரவு  கல்வீச்சுத் தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 14 ஆம் திகதி இரவு பெரும்பான்னை இனத்தை சேர்ந்த இருவர் சிகரெட் வாங்குவதற்காக வர்த்தக நிலையம் ஒன்றிற்கு சென்ற போது இடம்பெற்ற வாக்குவாதம் மோதலாக மாறி, உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஐவர் அங்கும்புறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் ஏற்கனவே காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களாவர்.

இன் நிலையில் மறுநாள் 15 ஆம் திகதி இரவு கல்ஹின்னை படகொல்லாதெனிய மற்றும் பெபிலகொல்ல ஆகிய இரு பள்ளிவாசல்களுக்கும் கல்வீச்சு இடம் பெற்றுள்ளதாகவும் இதன் காரணமாக பள்ளிவாசல்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர். 

இக் கல் வீச்சுடன் சில வீடுகளும் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அங்கும்புறை பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளதுடன் அப் பிரதேசத்தற்கு மேலதிக பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.