(எம்.மனோசித்ரா)

கெரவலப்பிட்டி மின்உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தம் இரகசியமாக செய்யப்படவில்லை. இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவையில் தெளிவுபடுத்தும் போது குறித்த 3 கட்சிகளின் தலைவர்களும் இருந்தனர்.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற டொலர் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் பலம்மிக்கதாக அமையும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கெரவலப்பிட்டி மின்உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தம் இரகசியமாக செய்யப்படவில்லை. இது அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனையாகும். இந்த யோசனை சமர்ப்பிக்கப்படும் போது குறித்த பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மூவருமே இருந்தனர். அவர்கள் இருக்கும் போது தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தினார். அதன் பின்னரே இணக்கப்பாடு எட்டப்பட்டது.

எனவே இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து முதலீட்டாளர்கள் வருகை தராத இந்த சந்தர்ப்பத்தில் இது எமக்கு பலமானதாக அமையும். அமெரிக்கா எம்முடன் பகை என்றே சகலரும் கூறுகின்றனர். இவ்வாறான நிலையில் இதுபோன்ற நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் போது மேலும் பல முதலீட்டாளர்கள் முன்வருவார்கள்.

2009 இல் யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஷங்ரிலா ஹோட்டல் வழங்கப்பட்ட போது அனைவராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த சூழல் எவ்வாறுள்ளது என்பதை அனைவராலும் அறிய முடியும். எனவே தற்போது காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமெனில் இவ்வாறான வழிமுறைகளை உபயோகப்படுத்த வேண்டும்.

எம்.சி.சி. ஒப்பந்தம் மிகவும் அபாயமுடையதாகும். ஆனால் இந்த ஒப்பந்தம் அவ்வாறானதல்ல. 15 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இந்த பங்கு எமக்கே கிடைக்கப் பெறும். நாட்டில் தற்போது பாரிய டொலர் நெருக்கடி காணப்படுவது மறைக்கக் கூடிய விடயமல்ல. இவ்வாறான நிலையில் இதுபோன்ற முதலீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அல்லது இதனை விமர்சிப்பவர்கள் இதற்கு பொறுத்தமான மாற்று யோசனையை முன்வைக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் எடுக்கப்படும் தீர்மானத்துடன் ஒத்திருக்க வேண்டும் என்றார்.