(இராஜதுரை ஹஷான்)

 

கெரவலப்பிடிய மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை. 

மாறாக 15 வருட கால ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. கட்சியையும், அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவதை பங்காளிக்கட்சியினர் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான  சாகர காரியவசம் தெரிவித்தார்.

கெரவலப்பிட்டிய மின்நிலையம் தொடர்பில் எதிர்க்கட்சியினரும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சியினரும் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. 

கெரவலப்பிட்டிய  மின்நிலையத்தின் பங்குகள் அமைச்சரவை அங்கிகாரமில்லாமல் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மின்நிலையத்தின் பங்குகளை  அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் 15 வருட கால ஒப்பந்த யோசனையை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமைச்சரவையில் தெளிவுப்படுத்தினார். அமைச்சரவை யோசனையை அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் எவரும் எதிர்க்கவில்லை. அனைவரும் இணக்கம் தெரிவித்தார்கள்.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் பங்காளிக்கட்சியின் உறுப்பினர் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது. 

இவ்விடயம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பங்காளி கட்சி தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தெளிவுபடுத்தப்பட்டது.

 ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நாடு திரும்பியவுடன் இவ்விடயம் குறித்து  பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும். அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.