(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஆசிய கரப்பந்தாட்ட வரிசையில் 14 ஆவது இடத்திலிருந்த இலங்கை ஆண்கள் கரப்பந்தாட்ட அணி 3 இடங்கள் கீழிறக்கப்பட்டு 17 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

ஜப்பானின் ச்சீபா நகரில் அண்‍மையில் நடைபெற்று முடிந்த  ஆண்களுக்கான 21 ஆவது ஆசிய கரப்பந்தாட்ட வல்லவர் போட்டியில் இலங்கை கரப்பந்தாட்ட அணியால்  பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதன் காரணமாகவே சரிவை எதிர்கொண்டது. 

கடந்த மாதம் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி வென்று ஆசிய கரப்பந்தாட்டப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றிருந்தது. 

எனினும்,  இறுதிக் கட்டத்தில்  இலங்கை வீரர்கள் பலரும் கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பீடிக்கப்பட்டிருந்ததால் இப்போட்டித் தொடரிலிருந்து விலகிகொள்வதற்கு இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்தது.

ஆகவே, இந்த போட்டியில் இலங்கை அணி பங்கேற்க முடியாது போனதாலேயே ஆசிய கரப்பந்தாட்ட தரவரிசையில் சரிவை அடைந்ததாக கரப்பந்தாட்ட விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

21 ஆவது ஆசிய கரப்பந்தாட்டப் வல்லவர் போட்டியின் இறுதிப் போட்டியில் வென்ற ஈரான் கரப்பந்தாட்ட அணி நான்காவது தடவையாக மகுடம் சூடியது. 

இறுதிப் போட்டியில்  ஜப்பானை எதிர்கொண்ட ஈரான் 83க்கு 76 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் மூன்று செட்களையும் (27க்கு 25, 25க்கு 22, 31க்கு 29 ) கைப்பற்றி சம்பியனாகினர். 

இப்போட்டித் தொடரின் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் சீனா அணி 75க்கு 50 என்ற  புள்ளிகள் கணக்கில்  சீனதாய்ப்பே அணியை வென்றது.