இன்று நாட்டியப் பேரொளி பத்மினியின் 15 ஆவது ஆண்டு நினைவஞ்சலி

By Digital Desk 2

24 Sep, 2021 | 06:00 PM
image

பத்மினி ஜூன் 12, 1932 அன்று பிறந்தார்.   இந்திய சினிமா வரலாற்றில் தடம் பதித்த ஓர் கலைஞர் பத்மினி.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். நாட்டியப் பேரொளி எனப் பட்டம்  கொண்டவர் பத்மினி.

திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன், சரஸ்வதி ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். 

இவர்களது பெரிய தாயாரின் கலை ஆர்வமே இவர்களை நடனத்தில் ஈடுபடச் செய்தது. திருவாங்கூரில் பல தொழில் நிறுவனங்களில் இயக்குனராக இருந்தவர். மற்றொரு பெரிய தாயார் திருவாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி.திருவாங்கூர் சகோதரிகளின் சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். பத்மினி 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு 1977இல் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் குடியேறினார். அங்கு பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார்.

பத்மினி நான்கு வயதில் நாட்டியம் ஆடப்பயின்றார். முதலில் சகோதரிகள் திருவாங்கூர் நடன ஆசிரியர் கோபிநாத்திடம் பயிற்சி பெற்றனர். கதகளி, பரதம், மணிப்புரி ஆகிய மூன்று ஆடல் கலைகளிலும் பயிற்சி பெற்றனர்.பத்து வயதில் அரங்கேறி, ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்டார். 

குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர்.17 வயதில் திரையுலகில் புகுந்தார். இயக்குனர் உதயசங்கர் தனது கல்பனா என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் இவர்களை நடிக்கவைத்தார்.

ஆனாலும், இவர்கள் நடனமாடி வெளிவந்த முதல் திரைப்படம் கன்னிகா (1947) என்பதாகும். இப்படத்தில் சிவமோகினி வேடத்தில் நடனமாடினார். பின்னர் வேதாள உலகம் படத்தில் நடனமாடினார். என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த மணமகள் என்ற படத்தில் நடித்தார்.இவை தவிர சிலோன் தியேட்டர்சின் கபாடி அரட்சகாயா என்ற சிங்களப் படத்திலும் நடனமாடினார்கள். தமிழில் சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். பத்மினி 250 படங்களுக்கு மேல் நடித்தார். சிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார். தில்லானா மோகனாம்பாள், இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க திரைப்படம் ஆகும்.

இத்திரைப்படத்தில் சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜி கணேசனும், மோகனாங்கியாக பத்மினியும் நடித்தனர். வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினிக்கும், வைஜயந்திமாலாவிற்கும் நடக்கும் நாட்டியப்போட்டிக் காட்சி புகழ் பெற்றது.

பத்மினி பெற்ற விருதுகள்:

சிறந்த நடிகை விருது (Film Fans Association in 1954, 1959, 1961 and 1966)

கலைமாமணி விருது (தமிழ் நாடு அரசு, 1958)

சிறந்த பரதநாட்டிய கலைஞர் விருது - மாஸ்கோ இளைஞர் விழா 1957

பிலிம் ஃபேர் விருது (1985)

சோவியத் ஒன்றியம் அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.பத்மினி, 2006 செப்டம்பர் 24 ஞாயிறு இரவு மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

"வெள்ளித்திரையில் தோன்றிய நாட்டியத்தாரகை விண்ணில் தஞ்சமடைந்த நாளில் அவரை நினைவு கொள்வோமாக"

எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right